நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும்- நிதின் கட்கரி
நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்றும், சுங்கக் கட்டணம் வசூலிக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் நேற்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாடு முழுவதும் 5 கோடியே 56 பாஸ்டேக்குகள் அளிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது நாளொன்றுக்கு 120 கோடி ரூபாய் சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணம் பெறப்படுவதாகவும் தெரிவித்தார். நாடு முழுவதும் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்றும், வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலையோ, வாகன நெரிசலோ இருக்காது எனவும் அவர் உறுதி அளித்தார்.
அதேநேரம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் மாற்று முறையில் சுங்க கட்டணம் வசூலிக்க இரண்டு வழிகளை அரசு பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
வாகனங்களில் பொருத்தப்படும் ஜி.பி.எஸ். கருவி மூலம் வங்கி கணக்கில் இருந்து நேரடியாகவோ அல்லது கணினிமயமாக்கப்பட்ட அமைப்பு கொண்ட நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு மென்பொருள் தயாரித்து கட்டணத்தை வசூலிக்கவோ திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாகப் பேசிய தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன், மாநிலம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இயந்திரத்தனமாக ஆண்டுதோறும் டோல் கட்டணத்தை உயர்த்தி வருவதாகவும், அரசு போக்குவரத்து பேருந்துகள் மற்றும் மாநில அரசு வாகனங்களுக்கு கூட கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உறுப்பினர் தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதின் கட்கரி, நகர எல்லையில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் எனத் தெரிவித்தார்.
Comments