ஆடிப்பெருக்கு விழா... நீர் நிலைகளில் திரண்ட மக்கள்...!
தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நீர் நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர். மேலும், நீர் நிலைகளில் புதுமண தம்பதிகளுக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது...
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட ஏராளமான பொது மக்கள் குவிந்தனர். அதேபோல், கீதாபுரம், ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட படித்துறைகளில் திரண்ட மக்கள் வாழை இலையில் படையல் இட்டு பூஜை செய்தனர்.
மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி ஆற்றில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்து போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்தின் திருவையாறு காவிரி கரையில் புதுமண தம்பதிகளுக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது...
அதேபோல், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்திலும் ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஏராளமான புதுமண தம்பதிகளுக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது...
Comments