கவிதை யூடியூப்பருக்கு கடுக்கா கொடுத்த துடுக்கான அழகி..! போச்சே.. ரூ.30 லட்சம் போச்சே என புலம்பல்..!
கவிதை வீடியோவில் நடிக்க வந்த இரு குழந்தைகளின் தாயை, இளம் மாடல் என நம்பி காதலில் விழுந்த யூடியூப்பர் ஒருவர் 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிகொடுத்து தவிப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அழகில் மயங்கி காதலில் விழுந்தவர் புகாருடன் காவல் நிலையத்தில் காத்திருக்கும் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
அவளின் பாதம் தொடங்கி.. நடையில்.... உடையில்... கண் அசைவில்.. புன்னகையில்... என்று வரி வரியாய் கவிதை பாடி மொத்தமாக 30 லட்சம் ரூபாயை பறிகொடுத்து தவிக்கும் பகலவன்ராஜா என்கிற ஆனந்த்ராஜ் இவர் தான்..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த யூடியூப்பர் பகலவன் ராஜா. தனது கவிதை வீடியோவில் நடிப்பதற்காக ஆள்தேடிய போது, துணைநடிகர் ஏஜென்ட் கணேஷ் மூலம் திண்டுக்கல்லை அடுத்துள்ள தாடிக்கொம்புவை சேர்ந்த திவ்யபாரதி என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார்.
தன்னை இளம் மாடல் என்று கூறிக் கொண்ட திவ்யபாரதி, சினிமாவில் துணை நடிகையாகவும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் மற்றும் தொகுப்பாளராக நடித்து வருவதாக கூறியதை நம்பி பகலவன் ராஜா , தனது கவிதை வீடியோவின் நாயகியாக்கி யூடியூப்பில் வெளியிட்டு வந்தார்.
காதல் கவிதையில் ஆரம்பித்த திவ்யபாரதியுடனான நட்பு , நிஜமாக காதலிக்கும் அளவுக்கு பகலவன் ராஜாவுக்கு நெருக்கமானது.
காதல் விவகாரம் தெரிந்து பகலவன் ராஜாவின் தாயார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சம்மதித்த நிலையில் திவ்யபாரதி திருமணம் செய்யாமல் காலம் கடத்தி வந்துள்ளார்.
முதலில் தனியாக வீடு எடுத்து தங்க வேண்டும் எனக் கூறியதால், திண்டுக்கல்லில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து திவ்யபாரதியை தங்கவைத்துள்ளார். வீட்டுச் செலவுக்கு என மாதம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து வந்துள்ளார்.
மேலும் தனது உடல்நிலை சரியில்லை மருத்துவ செலவிற்காக பணம் வேண்டும் என திவ்யபாரதி, ஒன்பது லட்சம் ரூபாய் கேட்டு வாங்கியுள்ளார். பகலவன் ராஜாவிடம் ஆசை வார்த்தை கூறி 10 பவுன் தங்க நகைகளையும் பெற்றுள்ளார்.
பகலவன் ராஜா திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறும் பொழுதெல்லாம் அவருடன் சண்டையிட்டு காலம் தாழ்த்தி வந்துள்ளார் . இதனால் சந்தேகம் அடைந்த பகலவன் ராஜா திவ்யபாரதி குறித்து விசாரித்துள்ளார்.
அப்பொழுது தான் திவ்யபாரதிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதும் அதனை மறைத்து அக்காள் குழந்தைகள் என ஏமாற்றியதும் தெரிய வந்தது.
இதையடுத்து திவ்யாபாரதி தன்னை ஏமாற்றி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பகலவன் ராஜா தாடிக்கொம்பு காவல் நிலையத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடமும் புகார் அளித்தார். தன்னிடம் திவ்யபாரதி, திருமணத்துக்கு விதித்த நிபந்தனைகளை எல்லாம் விரக்தியோடு விவரித்தார் பகலவன் ராஜா.
திவ்யபாரதி பணமுள்ள ஆண்களை குறி வைத்து தனது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு ஏமாற்றுவதாக பகலவன் ராஜா புகார் அளித்த நிலையில், இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவள் சிங்கிள் என்று நினைத்து வரி வரியாய் கவிதை வடித்த இந்த யூடியூப்பர் , அவள் இரு குழந்தைகளின் தாய் என்பதை அறிந்ததால் பணத்தோடு,வாழ்க்கையையும் தொலைத்த வலிகளோடு காவல்துறையினரின் நடவடிக்கைக்காக காத்திருக்கிறார்..!
Comments