போடுரா தம்பி பூட்டை.. தூக்குடா தம்பி பணத்தை.. ஜலாம் சிங்கிற்கு சலாம்..! களவாணி களை மடக்கிய காவலர்
கடை உரிமையாளரை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு, கடையில் இருந்து 7 லட்சத்து 85 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் வெள்ளி நாணயங்களை கொள்ளையடித்து சென்ற கடை ஊழியரை இரவு ரோந்து காவலர் மடக்கிப்பிடித்த சம்பவம் சென்னை சவுகார்பேட்டையில் நிகழ்ந்துள்ளது.
சென்னை சவுக்கார்பேட்டை பத்ரி வீராசாமி தெருவைச் சேர்ந்தவர் ஜாலம் சிங். பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த வியாபார கடை வைத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜாலம் சிங், கடந்த எட்டு வருடமாக இந்த பகுதியில் கடை நடத்தி வரும் நிலையில் 10 நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானை சேர்ந்த ராஜாராம் என்ற இளைஞரை தனது கடையில் வேலைக்கு சேர்த்துள்ளார். ஊழியர் ராஜாராம் தங்குவதற்கு தனது வீட்டிலேயே ஒரு அறையும் ஒதுக்கி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் திங்கட்கிழமை அதிகாலையில் மூட்டை முடிச்சுகளுடன் கதனது உறவினருடன் சென்ற ராஜாராமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சஜீவ் என்பவர் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளார்.
தாங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரெயில் நிலையம் செல்வதாக கூறி உள்ளனர். அவர்கள் எடுத்துச்சென்ற பைகளை சோதித்த போது அதில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுக்களும் வெள்ளி பொருட்களும் இருந்தது.
காவலரிடம், இது வசூல் பணம் என்று சொல்லி சமாளித்தனர். இந்த வேலையில் வசூல் பணம் கொடுத்து அனுப்புவது யார் ? என்று கேட்க இந்தியில் ஒருவரிடம் பேசிவிட்டு காவலரிடம் செல்போனை கொடுத்துள்ளனர். அந்த நபரும் இந்தியில் தனது பணம் என்று கூறி உள்ளார்.
சந்தேகம் தீராததால் இருவரையும் காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்றபோது கையை தட்டிவிட்டு தப்பி ஓடிய இருவரையும் , காவலர் மடக்கிப்பிடித்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தார்.
தன் மீது நம்பிக்கை வைத்து வீட்டில் தங்குவதற்கு அனுமதி கொடுத்த ஜலாம் சிங்கிற்கு திருட்டு புத்தியால் சலாம் போட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
ஜலாம் சிங் , தினமும் கடையில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுக்களை வைத்து செல்வதை நோட்டமிட்ட ராஜாராம்,
சம்பவத்தன்று நள்ளிரவு ஜலாம் சிங் குடும்பத்தினருடன் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருக்கு தெரியாமல் கடையின் சாவியை எடுத்துள்ளான்.
ஜலாம் சிங்கின் வீட்டு கதவை வெளிப்பக்கமாக பூட்டு போடு பூட்டிவிட்டு, கடைக்கு சென்று பணம் மற்றும் வெள்ளி பொருட்களை களவாடிக் கொண்டு சொந்த ஊருக்கு தப்பிச்செல்ல முயன்று போலீசில் சிக்கியது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 6 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், 200 கிராம் வெள்ள நாணயங்களும் கைப்பற்றப்பட்டது.
இந்த நிலையில் மேல் வீட்டார் உதவியுடன் , பூட்டை உடைத்து கதவை திறந்து வெளியே வந்த ஜலாம் சிங், தனது கடையில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பதற்றத்துடன் பூக்கடை காவல் நிலையத்துக்கு புகார் அளிக்கச்சென்ற ஜலாம் சிங் , அங்கு நின்றிருந்த ரோந்து காவலர் சஜீவ்விடம் கொள்ளை குறித்து புகார் அளிக்க , அவரோ கொள்ளையர்களை இரவோடு இரவாக பிடித்தாகிவிட்டது என்று கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கொள்ளையன் ராஜாராமுடன் அவரது சகோதரர் பீக்காராமையும் கைது செய்த போலீசார், புதிய நபர்களுக்கு தெரியும்படி பணபரிவர்த்தனை மேற்கொள்வதும், வீட்டிலேயே தங்குவதற்கு அனுமதிப்பதும் தவறு என்று சுட்டிக் காட்டுகின்றனர்.
அதே நேரத்தில் கொள்ளை நடந்த ஒரு மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை மடக்கிய ரோந்து காவலர் சசீவை காவல் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
Comments