மனைவியை சமாளிக்க செத்து செத்து விளையாடும் செஞ்சிக் கோட்டை வாலிபர்..!
எடுத்ததற்கெல்லாம் கையையும் கழுத்தையும் அறுத்துக் கொண்டு அடம்பிடித்த கணவன் மீது மனைவி கொதிக்கும் ரசத்தை ஊற்றிய நிலையில், மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி கணவன் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் செஞ்சி அருகே நடந்துள்ளது.
வரம் வாங்கி வந்த மாமுனி போல காவல் நிலைய வாசலில் நனைந்த நிலையில் அமர்ந்திருக்கும் இவர் தான் அட்டாக் நடராசன்..!
கோபம் வந்தால் தன்னை தானே துன்புறுத்திக் கொள்வதை கொள்கையாக கொண்ட நடராசன், மனைவியுடன் ஏற்பட்ட குடும்பபிரச்சனை காரணமாக செஞ்சி நான்கு முனை சந்திப்பில் நின்று தனது கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டார். சிகிச்சைக்கு பின்னர் உயிர் தப்பினார்
மருத்துவ மனையில் இருந்து வீடுதிரும்பிய சில தினங்களில், செஞ்சி பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தண்ணீர் பாட்டில் விற்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மீண்டும் தனது கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டார், 3 குழந்தைகளின் தந்தையான இந்த செஞ்சிக் கோட்டை வாலிபர்..!
கடந்த 18-ஆம் தேதி மீண்டும் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் நடராசனுக்கு பதில் அவரது மனைவி முந்திக் கொண்டார். வாக்கு வாதம் முற்றி நடராசன் கையில் பிளேடை எடுப்பதற்கு முன்பாக அவரது மனைவி ஆவேசமாகி அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த ரசத்தை எடுத்து நடராசன் மீது ஊற்றியதால் அவர் பலத்த காயம் அடைந்தார்
மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சையில் லேசாக காயங்கள் ஆறிய நிலையில் மனைவி மீது செஞ்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த நடராசன், தன் மீது அடுத்த அட்டாக்கிற்கு தயாரானார்.
போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நடராசன் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொள்ள முயன்றார்.
போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தற்கொலை முயற்சியை நமத்துப் போகச்செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அட்டாக் நடராசன் எழுந்து சென்று போதையில் காவல் நிலையத்திற்கு திரும்பி வந்து மதுப்பாட்டில் ஒன்றை உடைத்து கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றதால்.. மறுபடியும் முதலில் இருந்தா ? என்று புலம்பும் நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டனர்.
செத்து செத்து விளையாடுவது நடராசனுக்கு பொழுது போக்காக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் அவரை மீட்டு காப்பாற்றுவதற்காக போலீசார் படாத பாடு படுவதால், பொறுப்பான பல பணிகள் பாதிக்கப்படுவதாக குமுறுகின்றனர்.
Comments