காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம்..!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு பெற்றுத் தந்துள்ளார். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 4 பதக்கங்களை வென்றுள்ளது.
பிர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் இரண்டாவது நாளில், மகளிர் பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரங்கனை மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார். தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்த அவர், மொத்தம் 201 கிலோ எடையை தூக்கி நடப்பு தொடரில் முதல் தங்கத்தை இந்தியாவிற்கு பெற்றுத்தந்தார்.
தங்கப்பதக்கம் வென்றுள்ள மீராபாய் சானு புதிய வரலாறு படைத்திருப்பதாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு மீண்டும் பெருமை தேடித்தந்திருப்பதாகவும், வளரும் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் எனவும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
மகளிர்க்கான பளுதூக்குதல் போட்டியின் 55 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிந்த்யாராணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஆடவருக்கான பளு தூக்கும் போட்டியில் 55 கிலோ எடைப்பிரிவில் மகாராஷ்டிராவை சேர்ந்த சங்கேத் சர்கருக்கு வெள்ளிப்பதக்கமும், கர்நாடகாவைச் சேர்ந்த குருராஜ்க்கு 66 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கமும் கிடைத்துள்ளது. ஒரு தங்கம், 2 வெள்ளி உள்பட 4 பதக்கங்களை வென்றுள்ள இந்திய அணி பதக்கப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.
Comments