சென்னை அருகே அருவியில் காதலியை கழுத்தில் குத்தி கீழே தள்ளிவிட்ட காதலன்..! மாயமான வழக்கில் திகில் திருப்பம்

0 7977

சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் அமைந்துள்ள கைலாசா கோனா அருவிக்கு அழைத்துச்சென்று 18 வயது காதல் மனைவியை கத்தியால் குத்தி தள்ளிவிட்டு கொலை செய்ததாக சென்னை இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து சில மணி நேரங்கள் பயணித்தால் திருப்பதி செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஆந்திராவின் கைலாசா கோணா அருவி.

தமிழகத்தின் குற்றாலம் போல ,7 அருவிகளுடன் காணப்படும் இந்த கைலாசா கோனாவில் 3 அருவிகளில் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டு வந்தது. வார இறுதி நாட்களில் தமிழக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். மற்ற நாட்களில் இங்கு ஒரு சிலர் மட்டுமே வந்து செல்வர். போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் , மதுப்பிரியர்களுக்கும், தனிமையை தேடி வரும் காதல் ஜோடிகளுக்கும் வசதியான இடமாக காட்சி அளித்தது.

அப்படிப்பட இந்த அருவியில் தற்போது போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதற்கு காரணமான ஒரு காதல் ஜோடி தான்..!

செங்குன்றத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகளான 18 வயது தமிழ்செல்வியை காதல் வலையில் விழ்த்திய மெக்கானிக் மதன் கோவிலில் வைத்து தாலி கட்டி மனைவியாக்கி உள்ளார்.

3 மாதங்கள் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது வாழ்க்கையில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 23 ந்தேதி தமிழ்ச் செல்வி மாயமானார். தனது மனைவி வேறு ஒரு இளைஞருடன் சென்று விட்டதாக கூறி மதன் கஞ்சா மற்றும் மது குடித்து வந்தான்.

இந்த நிலையில் தங்கள் மகள் தமிழ் செல்வியை காணவில்லை என்று செங்குன்றம் போலீசில் புகார் அளித்த தந்தை மாணிக்கம், நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

செங்குன்றம் போலீசாரின் விசாரணையில் மதன் அவரது மனைவியுடன் கைலாசா கோனா அருவிக்கு சென்றதாக அவரது நண்பர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்தி மாயமான தமிழ்செல்வி புகைப்படத்துடன், ஆந்திர மாநிலம் நாராயணவனம் டவுன் போலீஸ் நிலையம் சென்று விசாரித்தனர். அருவிக்கு செல்லும் வழியில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து இருசக்கர வாகனத்தில் தமிழ் செல்வியை மதன் அங்கு அழைத்துச் சென்று விட்டு தனியாக திரும்பியதை உறுதி செய்தனர்.

இதையடுத்து போதையில் மிதந்த மெக்கானிக் மதனை பிடித்து விசாரித்த போது தமிழ் செல்வி மாயமான மர்மம் விலகியது.

திருமணமான சில தினங்களிலேயே தனது நண்பர்களுடன் தமிழ்செல்வி செல்போனில் பேசியதை தவறாக சந்தேகித்த மதன், கஞ்சா போதையில் மனைவியை அடித்து உதைத்துள்ளான்.

ஜூன் மாதம் 23 ந்தேதி தமிழ் செல்வியை அழைத்துக் கொண்டு கைலாசா கோனா அருவி சென்று குளித்து மகிழ்ந்த மதன், அருவியில் குளிக்கும் போது தான் மறைத்து எடுத்துச் சென்றிந்த கத்தியால் கழுத்தில் குத்தி, அவர் உயிரிழந்தது உறுதியானதும் கீழே தள்ளிவிட்டதாக மதன் கூறிய நிலையில் தற்போது வரை சடலம் கிடைக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கண்டதும் காதல் கொண்டதே மணக்கோலம் என்று காதலனை நம்பிச்சென்ற பெண் கானகத்தில் காணாப்பிணமான விபரீதம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments