கள்ளக்குறிச்சி கலவரத்தால் இடமாற்றமான எஸ்.பி செய்த மனிதநேய உதவி..! பஹ்ரைனில் தவித்தவர் மீட்பு
கள்ளக்குறிச்சியில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு வேலைக்காக சென்று 31 வருடங்களாக சொந்த ஊருக்கு திரும்ப இயலாமல் தவித்த முதியவர் ஒருவர், அங்குள்ள அன்னை தமிழ் மன்றம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு சொந்த ஊருக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கலவரத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி எஸ்.பி செல்வக்குமாரின் மனிதநேய உதவி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த பச்சமுத்து என்பவர் 1991 ஆம் ஆண்டு வேலைக்காக பஹ்ரைன் நாட்டிற்கு சென்றார். அங்கு சென்ற பின்னர் பச்சமுத்து குடும்பத்தினரை தொடர்பு கொள்ளாத நிலையில், அவர் எங்கு இருக்கிறார் ? என்ன நிலமையில் இருக்கிறார் ? என்பது தெரியாமல் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தவித்து வந்தனர்.
பஹ்ரைன் சென்ற கணவரை கண்டுபிடித்து தரும்படி மாவட்ட ஆட்சியர் தொடங்கி பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்து வந்தனர் ஒரு கட்டத்தில் பச்சமுத்துவை தேடுவதை கைவிட்டனர். 31 ஆண்டுகள் கடந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் இருந்து அண்மையில் பஹ்ரைன் சென்ற ஒருவர், பச்சமுத்துவின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு அவர் உயிரோடு இருப்பதை உறுதி செய்துள்ளார். இதையடுத்து அவர்கள் கள்ளக்குறிச்சி எஸ்.பி செல்வக்குமாரிடம் உதவி கேட்டுள்ளனர்.
எஸ்.பி செல்வக்குமார், பஹ்ரைனில் உள்ள அன்னை தமிழ் மன்றத்தை தொடர்பு கொண்டு பச்சமுத்து குறித்த தகவல்களை தெரிவித்து அவரை கண்டுபிடித்து மீட்டு அனுப்பி வைக்க வேண்டுகோள் விடுத்தார். அன்னை தமிழ் மன்ற நிர்வாகியான தூத்துக்குடியை சேர்ந்த செந்தில் தலைமையிலான குழுவினர் முதியவர் பச்சமுத்துவை கண்டுபிடித்தனர்.
ஊருக்கு அனுப்பி வைப்பதாக கூறியதும், கண்ணீர் விட்டு அழுத முதியவர் பச்சமுத்துவை தேற்றி, தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கிய அன்னை தமிழ் மன்றம், சட்டரீதியான உதவிகளையும் செய்தது. பிரைவசி சட்ட அமைப்பு, உலக வெளி நாட்டு வாழ் கூட்டமைப்பு ஆகியவற்றின் உதவியோடு இந்திய தூரக அதிகாரிகள் மற்றும் பஹ்ரைன் அரசின் ஒத்துழைப்புடன், பச்சமுத்து தாய் நாடு திரும்ப ஏற்பாடு செய்தது. அந்த முதியவருக்கு இந்திய தூதரகம் சார்பில் பிரத்யேக பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.
அன்னை தமிழ் மன்றத்தின்செயலாளர் தாமரைகண்ணன் உடன் முதியவர் பச்சமுத்துவை பாதுகாப்பாக விமானத்தில் வெள்ளிக்கிழமை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
விமானம் மூலம் சென்னை வந்த முதியவர் பச்சமுத்துவை அவரது குடும்பத்தினரிடம் கண்ணீர் மல்க கட்டியணைத்து வரவேற்றனர். பச்சமுத்து பஹ்ரைன் சென்ற போது 2 வயது குழந்தையாக இருந்த அவரது மகன் 33 வயது இளைஞனாக தந்தையை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.
இந்த மீட்புக்கு முழு முதற்காரணமாக இருந்தவர் அப்போதைய கள்ளக்குறிச்சி எஸ்.பி செல்வக்குமார். முதியவரின் குடும்பத்தினர் கொடுத்த புகார் மனுவை ஏற்று பச்சமுத்துவை மீட்பதற்கு மனித நேயத்துடன் அன்னை தமிழ் மன்றத்தை தொடர்பு கொண்ட செல்வக்குமார் தற்போது கள்ளக்குறிச்சியில் பணியில் இல்லை. கள்ளக்குறிச்சி கலவரத்தில் காயம் பட்ட அவர், இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments