தாய்மொழிக் கல்வி அமித்ஷா வலியுறுத்தல்
சட்டம், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை தாய்மொழியில் கற்றுக் கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். புதிய கல்விக் கொள்கையால் ஆங்கிலேயர் கால கல்வி முறை மாற்றப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை உலகளாவிய கண்ணோட்டத்தை கொண்டிருக்கும் அதே வேளையில் பாரதத்தின் அடித்தளத்தில் வேரூன்றியுள்ளதாகத் தெரிவித்தார்.
நாட்டில் 95 சதவீதம் பேர் தங்கள் தாய்மொழியில் ஆரம்பக் கல்வியைப் பெறுவதாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்களின் முழுத் திறனையும் வெளிக்கொணர பிராந்திய மொழிகளை மேம்படுத்துவது அவசியம் என்றார்.
சட்டம், மருத்துவம், பொறியியல் ஆகியவை இந்திய மொழிகளில் கற்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அமித்ஷா, மாணவர்கள் தாய்மொழியில் சிந்திக்கும் போது மட்டுமே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் முன்னேற முடியும் எனவும் கூறினார்.
மாநிலங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் புதிய கல்விக் கொள்கை வெற்றிபெற முடியாது என்றும், இதனை எதிர்க்கும் மாநிலங்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.
Comments