இந்திய இளைஞர்களை எதிர்நோக்கும் உலகம் - பிரதமர் மோடிபேச்சு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவியருக்குப் பட்டங்களையும் தங்கப் பதக்கங்களையும் வழங்கிச் சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா மட்டுமல்லாமல் உலகமே இந்திய இளைஞர்களை நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42ஆவது பட்டமளிப்பு விழா வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்குத் திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசளித்தார்.
ஆராய்ச்சி ,தொழில்நுட்பப் படிப்புகள், பொறியியல் பாடப் பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகள் 69 பேருக்குப் பிரதமர் நரேந்திர மோடி பட்டங்களையும் தங்கப் பதக்கங்களையும் வழங்கிச் சிறப்பித்தார்.
பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் வணக்கம் எனத் தமிழில் கூறித் தொடங்கினார். பட்டம் பெறும் இளைஞர்களின் கனவுகள் நனவாக வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்தியா மட்டுமல்லாமல் உலகமே இந்திய இளைஞர்களை நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதாகவும், உலக வளர்ச்சிக்கான பொறியாக இந்தியா விளங்குவதாகவும் தெரிவித்தார்.
நூறாண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றை இந்தியா நம்பிக்கையுடன் எதிர்கொண்டதற்கு, அறிவியலாளர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார். கடந்த ஆண்டில் உலகில் செல்போன் உற்பத்தியில் இரண்டாமிடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளதாகவும், கடந்த ஆறாண்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் உயர்கல்வி, அனைவருக்கும் ஆராய்ச்சிக் கல்வி என்கிற இலக்கை நோக்கித் தமிழ்நாட்டு அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் தரவரிசையில் தமிழ்நாடு மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
வரவேற்புரையாற்றிய தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பட்டம் பெறும் மாணவர்கள் வேலைதேடுவோராக இல்லாமல் வேலை கொடுப்பவராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
பட்டமளிப்பு விழா நடைபெற்ற விவேகானந்தர் அரங்கில் போதிய இடமில்லாததால் மற்றொரு அரங்கில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். விழா முடிவில் அந்த அரங்குக்கும் சென்ற பிரதமர் மோடி கையசைத்து மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
Comments