செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி .!
செஸ் போட்டியுடன் தமிழ்நாட்டிற்கு வரலாற்றுத் தொடர்பு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவிததுள்ளார். இந்தியர்கள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, திருப்பூவனூரில் உள்ள சதுரங்க வல்லபநாதர் கோவிலில் இறைவனே சதுரங்கம் ஆடினார் என்று கூறப்படுவதாகத் தெரிவித்தார்.
தமிழகம் பல கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி இருப்பதாகக் கூறிய மோடி, சர்வதேச செஸ் போட்டி அதன் தாயகத்தில் நடைபெறுவதாகக் குறிப்பிட்டார்.
கொரோனா நோய்த்தொற்றுக்குப் பின் இந்தியா வலிமையுடன் திகழ்வதாக கூறிய மோடி, விளையாட்டுத் திறன் உள்ளவர்களையும், விளையாட்டுக்கான கட்டமைப்புகளையும் ஊக்குவிக்க வேண்டியிது அவசியம் என பிரதமர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குறுகிய காலத்தில் சிறப்பாக செஸ் ஒலிம்பியாட்டை நடத்துவதன் மூலம், தமிழ்நாட்டின் மதிப்பு, உலகளவில் மென்மேலும் உயரும் எனக் குறிப்பிட்டார். இதுபோன்ற போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழகத்திற்கு தொடர்ந்து தர வேண்டுமென பிரதமர் மோடியிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக கருப்பு, வெள்ளை ராஜா, ராணி காய்களை மூடி இருந்த வெல்வெட் துணியை நீக்கி அவற்றை திறந்து வைத்து, போட்டிகளை பிரதமர் தொடங்கி வைத்தார்.
முன்னதாக போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் வீரர்கள் தேசியக் கொடிகளை ஏந்தி அணிவகுத்து வந்தனர். பரதநாட்டியம், குச்சுப்புடி உள்ளிட்ட பாரம்பரிய நாட்டிய நிகழ்ச்சிகளும், பியானோ கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் இடம் பெற்ற கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் ரசித்து பார்த்தனர். விழாவில் தமிழர்கள், தமிழகத்தின் வரலாற்றை விளக்கும் நிகழ்ச்சி, நடிகர் கமல்ஹாசனின் பின்னணி குரலுடன் அரங்கேற்றப்பட்டது.
Comments