குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா.. இன்று நாட்டு மக்களிடையே உரை.!
கட்சி வேறுபாடுகளை மறந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மக்கள் பணியாற்ற வேண்டும் என, பதவிக்காலம் நிறைவடையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று மாலை அவர் உரை நிகழ்த்துகிறார்.
நாட்டின் குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு நாளை பதவியேற்கிறார். இந்நிலையில், பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், கட்சிகளுக்கு இடையே மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், நாட்டின் நலனை முதன்மையாகக் கொண்டு பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தலாம் என்றும், அது அமைதியான வழியில் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
நாடு வளர்ச்சியை நோக்கி பயணித்து வருவதாகவும், கிராம மக்களுக்கு வீடு, மின்சாரம், கழிப்பறை போன்ற வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார். கடந்த 18 மாதங்களில் 200 கோடி தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டிருப்பதாகவும், உலகமே இந்தியாவை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி, ராம்நாத் கோவிந்த் இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார்.
Comments