ஏக்கத்தையும்.. ஏமாற்றத்தையும்.. தகர்த்த இசைச்சூரர்..! ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது..!
ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் வெளியான படங்கள் பல தேசிய விருதுகளை கொத்திக் கொண்டு வந்தாலும், அவருக்கு விருது என்பது எட்டாக்கனியாகவே இருந்த வந்த நிலையில் சூரரை போற்று மூலம் முதன் முறையாக சிறந்த பின்னணி இசைஅமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெண்டில்மேன் படத்தின் ஹிட் பாடலான ஜிகுபுகு ஜிகுபுகு ரெயிலே பாடலின் பல்லவியை பாடி நடித்து கவனம் ஈர்த்த சிறுவன் ஜி.வி பிரகாஷ்குமார் , தமிழ் திரை உலகில் 2006 ஆம் ஆண்டில் வெயில் படம் மூலமாக இசை அமைப்பாளராக அறிமுகமானார்
சிறந்த படத்துக்கான தேசிய விருதை வெயில் வென்றாலும், ஜி.வி.பிரகாஷுக்கு விருதுகள் ஏதும் கிடைக்கவில்லை..! அதனை தொடர்ந்து அவர் இசையமைத்த ஆயிரத்தில் ஒருவன், அங்காடிதெரு , மதராசபட்டினம் உள்ளிட்ட படங்கள் பிலிம்பேர் உள்ளிட்ட பல வேறு விருதுகளை வேறு பிரிவுகளில் தட்டிச்சென்றாலும் ஜி.வி பிரகாசுக்கு கிடைக்கவில்லை..!
2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் 3 தேசிய விருதுகளை அள்ளிய போதும் ஜிவி பிரகாஷுக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. சைவம் படத்திற்கு பாடல் எழுதியவருக்கு தேசிய விருது கிடைத்தது ஜி.பி பிரகாசுக்கு கிடைக்கவில்லை
2016 ஆம் ஆண்டு தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாரிக்குவித்த காக்காமுட்டையும், விசாரணையும் ஜி.வி.பிரகாஷ்க்கு ஏமாற்றத்தையே தந்தது. இதனால் இசை அமைப்பதை குறைத்துக் கொண்டு படங்களில் நடிக்க தொடங்கினார்
2019 ஆம் ஆண்டு நடிப்பின் இடையே இசை அமைத்த அசுரன் படத்திற்கு 3 தேசிய விருதுகள் உள்ளிட்ட 34 விருதுகள் கிடைத்தது. அருமையான பாடல்களையும் பின்னணி இசையையும் கொடுத்த ஜி.வி பிரகாஷுக்கு எந்த ஒரு அமைப்பின் விருதும் கிடைக்கவில்லை
ஒரு கட்டத்தில் விருதுகள் கிடைக்காத விரக்தியை தனது பேட்டியில் கூட ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிலையில் அவரது ஏக்க குரல் யாருக்கு கேட்டதோ இல்லையோ, தேசிய விருது தேர்வுக்குழுவினரின் காதுகளுக்கு சூரரை போற்று படத்திற்கு அவர் அமைத்த பின்னணி இசையின் மூலம் எட்டி இருக்கின்றது. அதனால் தான்இந்த ஆண்டுக்கான சிறந்த பின்னணி இசை அமைப்பாளர் விருது ஜி.பி பிரகாஷ்குமாரை தேடி வந்திருக்கின்றது.
எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும் படிக்கட்டுகளாக்கி தான் பெற்ற முதல் விருதே தேசிய விருது என்று முத்திரை பதித்து இருக்கும் ஜி.வி பிரகாஷ்குமார் என்கிற இளம் இசைச்சூரரை போற்றுவோம்..!
Comments