இலங்கை ராணுவம் நடவடிக்கை... போராட்டக்காரர்கள் முகாம்கள் அகற்றம்
இலங்கையில் அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ் மற்றும் ராணுவ வீரர்கள் வலுக்கட்டாயமாக கலைத்தனர். அதிபர் அலுவலகம் முன் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களையும் அவர்கள் அப்புறப்படுத்தினர்.
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிபர் மற்றும் பிரதமர் அலுவலகம் மற்றும் இல்லங்களைக் கைப்பற்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் அலுவலகம் முன் தற்காலிக முகாம் மற்றும் தடுப்புகளை அமைத்து அரசுக்கு எதிராகப் போராடி வந்தனர்.
இந்நிலையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்ட நிலையில், அரசு அலுவலகங்களை ஆக்கிரமிப்பது சட்ட விரோதம் என்றும், அலுவலகங்களை விட்டு வெளியேறாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து இன்று பிற்பகலில் போராட்டத்தை கைவிட்டு திரும்புவதாக போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நள்ளிரவில் அதிபர் அலுவலகம் முன் திரண்ட ராணுவம் மற்றும் போலீசார், குழுமியிருந்த போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.
தார்பாய் உள்ளிட்டவைகளை கொண்டு அமைக்கப்பட்டு இருந்த முகாம்கள், தடுப்புகள், குடில்களை ராணுவ வீரர்கள் அப்புறப்படுத்தினர்.
அதிபர் அலுவலகம் மற்றும் குடியிருப்பில் தங்கி இருந்தவர்களை வலுக்கட்டாயமாக ராணுவ வீரர்கள் வெளியேற்றினர்.
Comments