குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை... இன்று மாலை முடிவு அறிவிப்பு.!

0 2094

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நாடாளுமன்றத்தின் 63ஆவது அறையில் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்த வாக்குகளும் எண்ணப்பட்ட பின் இன்று மாலை முடிவு அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜகவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் சார்பில் திரிணாமூல் காங்கிரசைச் சேர்ந்த யஸ்வந்த் சின்கா ஆகியோர் போட்டியிட்டனர்.

டெல்லியில் நாடாளுமன்றத்திலும், அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் திங்களன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.மக்களவை மாநிலங்களவை ஆகியவற்றின் 771 உறுப்பினர்களும், மாநிலச் சட்டமன்றங்களின் 4,025 உறுப்பினர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், 99 விழுக்காட்டுக்கு மேல் வாக்குகள் பதிவாகின.

மாநிலச் சட்டமன்றங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் டெல்லியில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்குக் கொண்டுவரப்பட்டன. நாடாளுமன்றத்தின் 63ஆவது அறையில் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முற்பகல் 11 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேர்தல் அதிகாரியான மாநிலங்களவைச் செயலர், வாக்கு எண்ணும் அதிகாரிகள், வேட்பாளர்கள், அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள், ஊடகச் செய்தியாளர்கள் மட்டும் வாக்கு எண்ணும் அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்த வாக்குகளையும் எண்ணி முடித்த பின் இன்று மாலையில் முடிவு அறிவிக்கப்படும்.

பாஜக, சிவசேனா, அதிமுக, ஐக்கிய ஜனதாதளம், பிஜு ஜனதாதளம், சிரோமணி அகாலிதளம் ஆகியவற்றுக்குப் பெரும்பான்மை வாக்குகள் உள்ளதால் திரவுபதி முர்மு 51 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளுடன் வெற்றிபெறுவார் எனக் கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24 அன்று நிறைவடைவதால், புதிய குடியரசுத் தலைவர் மறுநாள் பதவியேற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments