பைக் திருடர்களை கண்டுபிடித்த மாணவர் கொடூரக் கொலை..! சடலத்தை கிணற்றில் வீசினர்

0 4690

விழுப்புரம் அருகே தனது இருசக்கர வாகனத்தை திருடியவர்கள் குறித்து ஆதாரத்துடன் போலீசில் புகார் அளித்த கல்லூரி மாணவரைக் கொலை செய்த மர்ம கும்பல், சடலத்தை கிணற்றில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் அருண். 21 வயதான இவர், விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் இரண்டாமாண்டு பி.ஏ. வரலாறு படித்து வந்தார்.

சம்பவத்தன்று இவரது இருசக்கர வாகனம் திருட்டுப்போனது குறித்து, திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்போது, தனது இருசக்கர வாகனத்தை திருடியதாக தனது கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர்களுடன் தான் செல்போனில பேசிய குரல் பதிவையும் போலீசாரிடம் ஆதாரமாக காண்பித்துள்ளார்.

இதையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த வீரமணி, சரத்ராஜ், சத்தியா, கீர்த்திவர்மன் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்துள்ளனர். இருசக்கர வாகனத்தை தாங்கள் திருடவில்லை என்று அவர்கள் கூறியதையடுத்து போலீசார் அவர்களை திருப்பி அனுப்பி விட்டனர்.

இந்த நிலையில், சம்பவத்தன்று இந்த 4 பேரும் தங்கள் கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து, இருசக்கர வாகனத்தை நாங்கள்தான் திருடினோம். அதனை திருப்பித் தருகிறோம் எனக்கூறி, மாணவர் அருணை வீட்டிலிருந்து வெளியில் அழைத்துச் சென்றுள்ளனர்.

பணப்பாக்கம் ஏரிக்கரையில் வைத்து அருணனின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து அவரது ஆடைகளை களைந்துவிட்டு, அவரது சடலத்தை உள்ளாடையுடன் பணப்பாக்கம் ஏரியில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர்.

இந்த கொலை சம்பவத்தை சத்தியா என்பவன் கிராமத்துக்கு வந்து போதையில் உளறியுள்ளான். இதையடுத்து, கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, இவர்கள் 4 பேரையும் பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அருண் சடலத்தை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கிணற்றில் இருந்து மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கல்லூரி மாணவர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சில நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டிய மாணவரின் உறவினர்கள், உடனடியாக சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று அதுவரை மாணவர் உடலை உடனடியாக பிரேதப் பரிசோதனை செய்யக்கூடாது என்றும் தங்கள் முன்னிலையில் தான் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக்கூறி, இறந்த கல்லூரி மாணவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் டி.எடையார் கிராமத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

 

திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வந்து, சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், மறியல் கைவிடப்பட்டது. உயிரிழந்த மாணவரின் பெற்றோருக்கு அமைச்சர் பொன்முடி நேரில் சென்று ஆறுதல் கூறியபோதும் மாணவரின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments