நடிப்பிற்கோர் நடிகர் திலகம்!

0 2702

இன்று, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21வது நினைவுநாள்.... வசன உச்சரிப்பாலும், முகபாவனையாலும் ஈடுஇணையற்ற நடிகராகத் திகழ்ந்து, உணர்வுப்பூர்வமான நடிப்பால் சிகரம் தொட்டவரைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு..

1952 ல் அறிமுகமான முதல் திரைப்படமான பராசக்தியில் கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான வசனங்களுக்கு தன்னுடைய சிறப்பான வசன உச்சரிப்பால் உயிர் கொடுத்தவர் சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன்.!

அபார ஞாபகசக்தியால் மிக நீண்ட வசனங்களையும் ஒரே மூச்சில் பேசும் வல்லமை படைத்தவராகத் திகழ்ந்தார் சிவாஜி... திருவிளையாடல், கந்தன்கருணை போன்ற புராணப் படங்களில் நடிகர் திலகம் தந்த நடிப்பை இன்றளவும் எவரும் மிஞ்சிவிடவில்லை

சம்பூர்ண ராமாயணம், கர்ணன் போன்ற இதிகாசப் படங்களிலும் தன்னை அந்த கதாபாத்திரமாகவே நிலை நிறுத்திக்கொண்டவர் நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன்

தேசபக்தியிலும் பகுத்தறிவு கருத்துகளிலும் சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் வேறு எந்த நடிகரும் தொடாத உயரங்களைத் தொட்டன. கட்டபொம்மன் , வ.உ.சி, பகத்சிங், கொடிகாத்தகுமரன், பாரதியார் என அனைவரையும் தன்னுடைய நடிப்பால் மக்கள் மனதில் விதைத்தவர் அவர்.

திரைப்படத்தில் சமகாலப் போட்டியாளரான எம்.ஜி.ஆருடன் இணைந்து கூண்டுகிளி தந்த சிவாஜி கணேசன், பெருந்தலைவர் காமராஜரிடம் எப்போதும் தனிப்பற்று வைத்திருந்தார்.

ஏழை, பணக்காரன், பக்தன், குடிகாரன், பித்தன், பேரறிவாளன், மன்னன், விடுதலை வீரன் என இவர் ஏற்காத பாத்திரங்களே இல்லை. எத்தனை வேடமேற்றாலும், எந்த வயது வேடமானாலும், அத்தனை வேடங்களிலும் மாறுபட்ட நடிப்பை கொடுப்பதில் என்றுமே சிவாஜி மட்டுமே முன்னோடி

குடும்ப பந்தங்களின் உறவுகளின் பரிதவிப்புகளின் மீது சிவாஜி கணேசனின் திரைக்கதைகள் புனையப்பட்டன. அந்த உணர்ச்சிகரமான மன நிலைகளை அவருடைய முகமும் உடலும் திரையில் பிரதிபலித்தன. குலமகள் ராதை, ஊட்டிவரை உறவு என காதல் படங்களுக்கு அன்றே வசந்த மாளிகை அமைத்துக்கொடுத்தவர் சிவாஜி கணேசன்..!

நாயகனாக நடித்தாலும், இளைய நாயகனுக்கு இணையாக நடித்தாலும் சிவாஜி கணேசனின் நடிப்பும், வசன உச்சரிப்பும் எவராலும் எட்டிப்பிடிக்க இயலாதவை

அதிகப்படியான நடிப்பை மட்டுமல்ல, யதார்த்தமான நடிப்பையும் தன்னால் வழங்க இயலும் என்று கலை ரசிகர்களுக்கு முதல் மரியாதை கொடுத்தார்

44 ஆண்டுகளில் 275 படங்களுக்கு மேல் நடித்து ஏராளமான விருதுகளை பெற்று மகத்தான சாதனையுடன் கலைப்பயணத்தை ரஜினி, கமல், விஜய் போன்றோருடன் வெற்றிகரமாக தொடர்ந்த சிவாஜி கணேசன், 2001-ல் இதே நாளில் காலமானார்

ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ள சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் படங்களாக மட்டுமல்ல, பாடங்களாகவும் திகழ்கின்றன. நடிப்பைக் கற்றுக் கொள்வோருக்கு சிவாஜி ஒரு திறந்தவெளிப் பல்கலைக்கழகம் என்றால் அது மிகையல்ல.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments