குடியரசுத் தலைவர் தேர்தல் - பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன
நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர்.
கடந்த 18ந் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில், மக்களவை - மாநிலங்களவை எம்.பி.க்களும், அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். 99 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் இத்தேர்தலில் பதிவாகி உள்ளன.
தேர்தலில் பதிவான வாக்குச்சீட்டுகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள் அனைத்தும் மாநில சட்டப்பேரவைகளிலிருந்து நாடாளுமன்ற வளாகத்துக்கு எடுத்து வரப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியதும், முதலில் எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். பின்னர், அகரவரிசைப்படி முதல் 10 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு வெளியிடப்படும். அதன்பின்னர், அடுத்த 20 மாநிலங்களின் நிலவரம் அறிவிக்கப்பட்டு மாலைக்குள் இறுதி முடிவு வெளியிடப்படும்.
திரெளபதி முர்மு வெற்றி பெறும்பட்சத்தில், நாட்டின் உயரிய அரசியலமைப்புப் பதவியை அடையும் முதல் பழங்குடியினப் பெண் என்ற பெருமையை அவர் பெறுவார்.
தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-இல் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25-இல் பதவியேற்கிறார்.
Comments