மாணவியின் உடலுக்கு மறுகூறாய்வு.. பள்ளியில் சிபிசிஐடி, தடயவியல்துறை ஆய்வு

0 2682
மாணவியின் உடலுக்கு மறுகூறாய்வு.. பள்ளியில் சிபிசிஐடி, தடயவியல்துறை ஆய்வு

பெற்றோர் தரப்பில் யாரும் இல்லாமல், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடலுக்கு மறுகூறாய்வு நடைபெற்றது. அதேவேளையில், கலவரம் நடந்த பள்ளியில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளும், தடயவியல் துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி கடந்த 13ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சடலத்தை வாங்க மறுத்த பெற்றோர், மறு பிரேத பரிசோதனை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன் விசாரணையில், மாணவியின் சடலத்தை 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் மறுபிரேத பரிசோதனை செய்ய நேற்று உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், தங்கள் தரப்பு மருத்துவரையும் குழுவில் இடம்பெற செய்ய வேண்டும் என மாணவியின் தந்தை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இன்று மறு உடற்கூறாய்வு செய்வதற்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு, வழக்கை நாளை விசாரிப்பதாக தெரிவித்தது.

உச்சநீதிமன்றம் தடை விதிக்காததால், மறு உடற்கூராய்வு நடைமுறையை தொடங்கலாம் என உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். பெற்றோர் எங்கு இருகிறார்கள் என தெரியவில்லை என காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்ட நிலையில், பெற்றோர் இல்லாமல் மறு உடற் கூறாய்வு செய்யவும், அவர்கள் வந்தால் அனுமதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், கடலூர் மாவட்டம் வேப்பூர் துணை வட்டாட்சியர்கள் மாணவியின் வீட்டில் மறு உடற்கூறாய்வு நடத்துவதற்கான நோட்டீசை ஒட்டியதுடன், அவரது உறவினரிடமும் அதனை அளித்துச் சென்றனர்.

பின்னர், பெற்றோர் தரப்பில் யாரும் இல்லாமல், கள்ளக்குறிச்சி மாணவியின் உடலுக்கு அரசு மருத்துவமனையில் மறுகூறாய்வு நடைபெற்றது. விழுப்புரம், திருச்சி, சேலம் அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் கீதாஞ்சலி, ஜுலியானா ஜெயந்தி, கோகுலநாதன் தலைமையில் மறுகூறாய்வு நடந்தது.

முன்னதாக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடலுக்கு முதலில் உடற்கூறாய்வு செய்த மருத்துவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ஜியா உல் ஹக் தலைமையில் விசாரணை குழுவினர், கலவரம் நடந்த பள்ளியில் சேதமடைந்த வகுப்பறைகள், தீக்கிரையாக்கப்பட்ட பேருந்துகள் போன்றவற்றை பார்வையிட்டனர்.

அதேபோல், மாணவியின் உடலில் எத்தனை இடங்களில் காயங்கள் உள்ளது என்பதை ஆய்வு செய்த மருத்துவ குழுவினர் பள்ளியில் பார்வையிட்டனர்.

மாணவி 3வது மாடியில் இருந்து விழுந்ததாக சொல்லப்படும் இடத்தில் ஆய்வு செய்து அந்த இடத்தின் உயரம், உடலில் இருக்கக்கூடிய காயங்கள் அவ்வாறு விழுந்தபோது ஏற்பட்டவையா ? உள்ளிட்டவற்றை குழுவினர் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. தடயவியல் துறை நிபுணர் சாந்தக் குமாரியும் பள்ளியில் தனது குழுவினருடன் ஆய்வு செய்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments