பீம் பாய்.. பீம் பாய்.. மீன் கடையில சுருட்டின ரூ 2 கோடியை எடுத்து வை..! ஹார்லி டேவிட்சன் வாழ்க்கை காலியானது
கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் உள்ள மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணத்தை கையாடல் செய்து சொந்த வீடு, ஹார்லி டேவிட்சன் பைக் என சொகுசாக வாழ்ந்து வந்த இளைஞரை சாமர்த்தியமாக பேசி உண்மையை ஒப்புக் கொள்ள வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் கடலுக்கு சென்று திரும்பும் மீனவர்களிடம் இருந்து மீன்களை கொள்முதல் செய்து அவற்றை தரம் பிரித்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது..!
இந்த நிறுவனத்தில் பீம் பாய் போல வலம் வந்தவர் டேனியல் செபாஸ்டின் என்ற 33 வயது இளைஞர், 2015 ஆம் ஆண்டுமுதல் காசாளராக வேலைபார்த்து வந்தார். கடந்த மே மாதம் மதன் என்ற மீனவரிடம் 27 ஆயிரத்து 630 ரூபாய்க்கு மீன் வாங்கியதாக 2 பில்கள் மூலம் கணக்கு காண்பித்துள்ளார்.
இந்த நிருவனத்தின் நிர்வாக இயக்குனர் வசந்த் , தற்செயலாக அந்த மீனவர் மதன் யார்? என்று விசாரித்த போது அப்படி ஒரு மீனவரே இல்லை என்பதும் இரண்டும் போலியாக போடப்பட்ட பில்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து டேனியல் செபாஸ்டினை அழைத்து, வசந்த், தம்பி நீங்கள் போலியாக பில் போட்டு எவ்வளவு பணம் எடுத்திருக்கீங்கன்னு கண்டுபிடித்து விட்டோம், அந்த பணத்தை ஒப்படைக்க வில்லை என்றால் போலீசில் புகார் கொடுப்போம் என்று அதட்டி கேட்டுள்ளார்.
இதையடுத்து பதறி போன டேனியல், தான் போலி பில் போட்டதாக 5 லட்சம் ரூபாயை கொடுத்து தான் தெரியாமல் தவறு செய்து விட்டதாக கதறி உள்ளார். போலி பில்லுக்கான தொகை 27 ஆயிரத்து 630 ரூபாய் என்ற போது எதற்காக 5 லட்சம் ரூபாய் கொண்டு வருகிறான் ஒரு வேளை அதிகமாக போலி பில் போட்டிருப்பன் போல என்று நிணைத்த வசந்த், இந்த தொகை போதாது, நீ எவ்வளவு போலி பில் போட்டிருக்கிறாய் என்பதை எல்லாம் கண்டு பிடித்து விட்டோம் என்று வசந்த் கறாராக கூறியதும் மேலும் 30 லட்சம் ரூபாயை வீட்டிலிருந்து எடுத்து வந்து அள்ளி வைத்துள்ளார் பீம் பாய் டேனியல்..!
இதை கண்டு அதிர்ந்து போன வசந்த், தன்னிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த 2015 ஆண்டு முதல் டேனியல் மொத்தம் எவ்வளவுதான் கையாடல் செய்துள்ளான்? என்று விசாரித்த போது மலைத்து போயினர்.
இல்லாத மீனவர்கள் பெயரில் மீன் வாங்கியதாக போலி பில்கள் மூலமாகவும், 10 கிலோ மீனை வாங்கிவிட்டு 20 கிலோ மீன் வாங்கியதாக ,மீன்களின் எடையை கூடுதலாக குறிப்பிட்டு அதற்குண்டான பணத்தை கையாடல் செய்தது என மொத்தம் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கையாடல் செய்த பணத்தில் சொந்தமாக வீடுகளையும், வள்ளியூர் கன்னியாகுமரியில் சில சொத்துக்களையும் வாங்கி உள்ள டேனியல் தனது மனைவியுடன் வெளியில் சென்று வருவதற்கு என்று பிரத்யேகமாக விலை உயர்ந்த harleydavidson பைக் வாங்கி வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்ததையும், மீதம் உள்ள பணத்தில் மனைவிக்கு நகைகள் வாங்கிக் கொடுத்ததுடன் அவரது பெயரில் வங்கியில் பல லட்சம் டெபாசிட் செய்திருந்ததையும் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் குமாரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் டேனியல் செபாஸ்டினை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
Comments