கள்ளக்குறிச்சி கலவரம்.. மாடுகளையும் திருடிய கலவரக்காரர்கள்...

0 7754

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்தது தொடர்பாக இன்று மேலும் இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர். 18 சிறார்கள் உள்பட 128 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாணவி உயிரழந்தது தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு  மாற்றப்பட்டுள்ளது. மாணவி உயிரிழந்தது தொடர்பாக நேற்று  பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில்,  இன்று வேதியியல் ஆசிரியர் ஹரிப்ரியா, கணித ஆசிரியர் கிருத்திகா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில், கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக இதுவரை 320 பிடிக்கப்பட்டு அதில் 128 பேர் கள்ளக்குறிச்சி குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த 128 பேரில் 18 பேர் சிறார்கள். இதில் 108 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் மீது 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்பியதாக கரூரில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு இன்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த கலவரத்தின் போது பள்ளியின் பின்புற வாசல் வழியாக 6 மாடுகளையும் கலவரக்காரர்கள் திருடிச்சென்று விட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கலவரக்காரர்களால் பள்ளியிலிருந்து அள்ளிச்செல்லப்பட்ட மேசை, நாற்காலிகள், கம்ப்யூட்டர் போன்ற பொருட்கள் அங்கு சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சிதறிக்கிடக்கின்றன. போலீசாரை கண்டதும் கலவரக்காரர்கள் அந்த பொருட்களை ஆங்காங்கே போட்டு விட்டு தப்பிச் சென்றனர். இந்த பொருட்களை போலீசார் இன்று வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தினார்கள்.

இந்நிலையில், கலவரம் நிகழ்ந்த பள்ளிக்கு பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதேபோல், இந்த கலவரம் குறித்து சிபிசிஐடி போலீசாரும் ஆலோசனை நடத்தினார்கள்.

இதனிடையே, மூடப்பட்டுள்ள சக்தி மெட்ரிக் பள்ளியை திறக்க வேண்டும் என்று  மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். பள்ளி மூடப்பட்டுள்ளதால் 4000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments