குடியரசுத் தலைவர் தேர்தல் - பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களிப்பு..!
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியும், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாக்களித்தனர்.
குடியரசுத் தலைவர் தேர்லில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.
காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்களும், எம்.பி.க்களும் வாக்களித்தனர்.
கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேராக தலைமைச் செயலகம் சென்று வாக்களித்தார். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வாக்களித்தார்.
இதேபோல உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் அந்தந்த மாநிலங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் எம்.பி.க்களுக்கு பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.க்களுக்கு பிங்க் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டன. தேர்தல் பதிவான வாக்குகள் அனைத்தும் டெல்லி கொண்டு வரப்பட்டு 21 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
Comments