கள்ளக்குறிச்சி மாணவி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவு

0 8016

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறுகூறாய்வு செய்யவும், அதை வீடியோ பதிவு செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கணியாமூர் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக அவர் தந்தை ராமலிங்கம் தொடுத்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? என நீதிபதி வினவினார். போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? என்றும், மாணவியின் இறப்புக்குக் காரணம் என்ன? என்றும் நீதிபதி வினவினார்.

வெளிநாட்டில் இருந்து தான் 14ஆம் தேதி தான் வந்ததாகவும், வன்முறையில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்றும் மனுதாரர் தெரிவித்தார். வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதைச் சிறப்புப்படை அமைத்துக் கண்டுபிடிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையில் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டதால் 4500 மாணவர்களின் நிலை என்னாகும்? என வேதனை தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பான வழக்கின் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் தெரிவித்தார். மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வன்முறை திடீர்க் கோபத்தில் வெடித்ததல்ல என்றும், திட்டமிட்ட வன்முறை என்றும் நீதிபதி தெரிவித்தார்.

வன்முறை தொடர்பாகச் சிறப்புப்படை அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டார். மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், உடலை மறுகூறாய்வு செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் தெரிவித்தார்.

எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறாய்வு செய்து, அதில் மாணவி மரணத்தில் சந்தேகம் இல்லை என அறிக்கை வந்தால், வன்முறை மூலம் ஏற்பட்ட பாதிப்பு மீண்டு விடுமா? என வினவிய நீதிபதி, தமிழகம் அமைதி பூங்கா எனச் சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில் அந்த நம்பிக்கையை வன்முறை புரட்டிப் போட்டுள்ளதாகத் தெரிவித்தார். வன்முறை கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாலும், தொடர்புடையோரைக் கைது செய்துவிட்டதாலும் தங்கள் வேலை முடிந்ததாகக் காவல்துறை நினைக்க வேண்டாம் எனத் தெரிவித்தார்.

பேட்டி கொடுக்கக் கூடாதென மனுதாரருக்கு அறிவுறுத்தும்படி வழக்கறிஞரை நீதிபதி கேட்டுக்கொண்டார். மாணவியின் உடலை மறுகூறாய்வு செய்யவும், அதை வீடியோ பதிவு செய்யவும், அப்போது மாணவியின் தந்தை உடனிருக்க அனுமதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். மாணவியின் இறுதிச்சடங்கு அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தியதுடன், மறுகூறாய்வுக்கான மருத்துவர் குழுவை நியமித்து வழக்கு விசாரணையை ஜூலை 29ஆம் நாளுக்குத் தள்ளி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments