பிளஸ் டூ மாணவி மர்ம மரணம்.. போராட்டத்தில் வன்முறை... பதற்றம்... கலவர பூமியாக மாறிய கணியாமூர்

0 12170

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் பயின்ற 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. கற்களை வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தை கலைக்க முயன்ற நிலையில், அங்கு பதற்றம் நீட்டிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கிப் பயின்ற 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் இறங்கினர்.

தொடர்ந்து 4ஆவது நாளாக போராட்டம் தொடரும் நிலையில், இன்று மாணவி பயின்ற பள்ளி முன்பு நூற்றுக் கணக்கானோர் திரண்டு, மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தடையை மீறி நடைபெற்ற போராட்டத்தை கலைக்க முயன்ற போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் போராட்டக்காரர்கள் லேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டினர்.

இதற்கிடையில், மாணவி பயின்ற பள்ளி வளாகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள், கண்ணில் எதிர்படுபவை மீதும் போலீசார் மீதும் கற்களை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இதில் கள்ளக்குறிச்சி எஸ்.பி உள்ளிட்ட காவலர்களுக்கும் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் போலீசாரின் வாகனங்களையும் செய்தியாளர்களின் வாகனங்களையும் தீ வைத்துக் கொளுத்தினர். அதோடு டிராக்டர்களைக் கொண்டு, பள்ளி பேருந்துகளை இடித்து நொறுக்கினர்.

போராட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதாலும் பதற்றம் தொடர்ந்ததால், போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மேலும், பதற்றத்தை தணிக்க அதிவிரைவுப் படையினரை வரவழைக்கப்பட்டனர். அவர்கள் போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

ஆனால், அப்போது போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் அங்கு பதற்றம் உருவானது. கலவரம் மூண்ட கணியாமூர் பகுதியில் செல்போன் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க ஜாமர்கள் பொருத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் ஒன்றிணைவதைத் தடுக்க, நெட்வொர்க்குகள் தடை செய்யப்பட்டு, அதிவிரைவுப்படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கணியாமூர் வன்முறை குறித்து பேசிய தமிழக டிஜிபி சைலேந்திர பாபு,  போராட்டக்காரர்கள் வன்முறையை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்தார். இனியும் கலவரத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்து பொதுமக்கள் அமைதி காக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து சமூகவலைதளங்களில் பதிவிட்ட அவர், கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிப்பதாகவும், காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்கு செல்ல உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் கைது செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். வன்முறை நிகழ்ந்த கணியாமூரில் உள்துறை செயலர் பணீந்திர ரெட்டியுடன் ஆய்வு செய்த பின் பேட்டியளித்த அவர், மாணவி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், வன்முறையின்போது டி.ஐ.ஜி., எஸ்.பி., 52 காவலர்கள் காயமடைந்ததாகவும், இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனை அடுத்து, காயமடைந்த டி.ஐ.ஜி., எஸ்.பி., உள்ளிட்டோரை பணீந்திர ரெட்டி, சைலேந்திர பாபு ஆகியோர் மருத்துவமனையில் நலம் விசாரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments