வரதட்சணையாக 105 சவரன், 5 லட்சம் ரொக்கம் - கட்டில் ஒரு டொயோட்டா சொகுசு கார்..! டுபாக்கூர் பேராசிரியர் கைது..!

0 15819
வரதட்சணையாக 105 சவரன், 5 லட்சம் ரொக்கம் - கட்டில் ஒரு டொயோட்டா சொகுசு கார்..! டுபாக்கூர் பேராசிரியர் கைது..!

ஐஐடி பேராசிரியர் என ஏமாற்றி பெண் மருத்துவரை திருமணம் செய்து 5 லட்சம் ரூபாய் ரொக்கம், 105 சவரன் நகை, டொயோட்டா காருடன் வாழ்க்கையை சூறையாடிய, ஏற்கனவே திருமணமான டிபன்கடைக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினர் மும்பையில் வசித்து வந்துள்ளார்.உறவினர்கள் மூலம் வரன் பார்த்து கடந்த 2020-ஆம் ஆண்டு ஐ.ஐ.டி யில் வேதியல் துறை பேராசிரியர் என்று கூறப்பட்ட பிரபாகரனுடன் திருமணம் நடந்துள்ளது. மணமகள் சென்னை மாநகராட்சி ஆரம்பசுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.

திருமணத்தின் போது வரதட்சணையாக 105 சவரன் நகை, டொயோட்டா கார், மணமகனுக்கு 6 சவரன் செயின், மோதிரம், ஐந்து லட்சம் ரொக்கம், 5 லட்சம் மதிப்புடைய கட்டில் உட்பட ஏராளமான சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக வாங்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது.

திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஜாபர்கன்பேட்டை பகுதியில் வசித்து வந்தனர். தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் பிரபாகரன் , பெண் மருத்துவரை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. பெண் மருத்துவரை கத்தியால் தாக்கி கொடுங்காயத்தை ஏற்படுத்தும் நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

ஒரு நாள் பிரபாகரனின் லேப்டாப்பில் அவர் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதற்கு ஆதாரமான ஈமெயில் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்த பெண் மருத்துவர், அவரது சகோதரருடன் சேர்ந்து அந்தப் பெண் குறித்த விபரங்களை விசாரித்த போது அவர் பெயர் ஷியாம சுந்தரி என்பதும் அவருக்கும் பிரபாகரனுக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டே திருமணம் நடந்து வேளச்சேரியில் ஒன்றாக குடித்தனம் நடத்தி வருவதும் அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சென்னை ஐஐடிக்கு சென்று பெண் மருத்துவரின் குடும்பத்தினர் விசாரித்த போது ஐஐடியில் ஆராய்ச்சி படிப்புக்காக விண்ணப்பித்ததோடு சரி, அதன் பிறகு பிரபாகரன் வகுப்புக்கும் வரவில்லை, அவர் பேராசிரியர் என்பதெல்லாம் சுத்த பொய் என தெரிவித்துள்ளனர்.

வரதட்சணையாக வாங்கிய 105 சவரன் நகைகளை வீட்டிலிருந்து திருடி சென்று அதில் 30 சவரன் நகையை முதல் மனைவி சியாம சுந்தரியிடம் கொடுத்ததோடு, மீதம் உள்ள நகைகளை அடகு கடையில் வைத்து தனது குடும்பத்தினருடன் சேர்ந்து நடத்தி வந்த டிபன் கடையை ஓட்டலாக மாற்றி இருப்பது தெரியவந்தது.

மகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து, வரதட்சணையாக கிடைக்கும் நகை பணத்துக்காக பெண் மருத்துவரை திருமணம் செய்து வைத்த பிரபாகரன் குடும்பத்தினர் மோசடிக்கு மூல காரணமாக இருந்ததாக கூறப்படுகின்றது.

இதுகுறித்த புகாரின் பேரில் அசோக் நகர் மகளிர் போலீசார் டுபாக்கூர் பேராசிரியர் பிரபாகரன், அவரது தந்தை விஸ்வநாதன், தாய் மஞ்சன்னை, சகோதரர் கண்ணதாசன், சகோதரரின் மனைவி வனிதா மற்றொரு சகோதரர் நெப்போலியன் ஆகிய ஒட்டுமொத்த குடும்பத்தினர் மீதும் மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.

பிரபாகரனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவான பிரபாகரனின் குடும்பத்தினரையும் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments