120 அடியை எட்டியது மேட்டூர் அணை..!
காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வந்தநிலையில், மேட்டூர் அணை 42-வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையிலிருந்து 50 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மிக அதிக அளவில் கனமழை நீடித்து வருகிறது. இதனால் கர்நாடகவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிவதையடுத்து, தமிழகத்திற்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 18 ஆயிரம் கன அடி வீதத்திற்கும் அதிகமாக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது.
ஒகேனக்கல்லில் காலை நிலவரப்படி, ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வந்துகொண்டிருந்தது. பாறைகளையும், அருவிகளையும் மூழ்கடித்து தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. இதனால் அங்கு குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும், ஆற்றங்கரைக்கு செல்லவும் விதிக்கப்பட்ட தடையை ஏழாவது நாளாக நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
காலை 10.30 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியதையடுத்து, அணையின் கொள்ளளவு 93.47டி.எம்.சி ஆக அதிகரித்துள்ளது. குறுவை சாகுபடிக்காக 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 16 கண் மதகு வழியாக 25 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
படிப்படியாக உபரிநீர் திறப்பு ஒரு லட்சம் கன அடி வரை அதிகரிக்கப்படும் என்பதனால் காவிரி ஆற்றங்கரையின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டனர்.
மேட்டூர் அணை நிரம்பியதால் உபரி நீர் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கும் திறந்து விடப்பட்டு உள்ளது. உபரி நீர் திறப்பு மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments