காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

0 1903

கர்நாடகத்தில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்து வரும் நிலையில், மேட்டூர் அணை இன்னும் சற்று நேரத்தில் நிரம்ப உள்ளது. அணைக்கு வரும் நீர் அப்படியே திறக்கப்படலாம் என்பதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மிக அதிக அளவில் கனமழை நீடித்து வருகிறது. இதனால் கர்நாடகவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிவதையடுத்து, தமிழகத்திற்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 18 ஆயிரம் கன அடி வீதத்திற்கும் அதிகமாக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது.

ஒகேனக்கல்லில் காலை நிலவரப்படி, ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வந்துகொண்டிருந்தது.பாறைகளையும், அருவிகளையும் மூழ்கடித்து தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. இதனால் அங்கு குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும், ஆற்றங்கரைக்கு செல்லவும் விதிக்கப்பட்ட தடையை ஏழாவது நாளாக நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 671 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 119.29 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக திறக்கப்படும் நீரின் அளவு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணையின் கொள்ளளவு 92.343 டிஎம்சி ஆக உள்ள நிலையில், அணை நிரம்பியதும் உபரிநீர் 50 ஆயிரம் கன அடி முதல் ஒரு லட்சம் கன அடி வரை எந்த நேரத்திலும் திறக்கப்படலாம் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

இதனால் காவிரி ஆற்றங்கரையின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாமக்கல், திருவாரூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட காவிரி கரையோர மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆற்றில் குளிக்கவோ, ஆற்றரைக் கடக்க முயற்சிக்கவோ வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments