இரட்டை கொலையாளியை அலேக்கா தூக்கிய மோப்ப நாய் பைரவி..! ஒற்றையடி பாதையில் திக் திக்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நாடக கலைஞரின் இரண்டாவது மனைவி மற்றும் அவரது மகனை பூட்டிய வீட்டுக்குள் வைத்து உயிரோடு தீவைத்து எரித்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை மோப்பம் பிடித்து அடையாளம் காட்டிய பைரவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த செங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த நாடக கலைஞர் செந்தாமரை கண்ணன். இவருக்கு 3 மனைவிகள். முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில் ஒரே ஊரில் இரண்டு மனைவிகளுக்கும் தனி தனி வீடு எடுத்து கொடுத்து குடித்தனம் நடத்தி வந்தார். சொத்தில் பங்கு தராத ஆத்திரத்தில் 3 வது மனைவி சத்யா, வேறு நபரை 4 வதாக திருமணம் செய்து கொண்டு, பிரிந்து சென்று விட்டதாக கூறப்பட்டது.
சம்பவத்தன்று செந்தாமரைக் கண்ணன் கோவைக்கு சென்றிருந்த நிலையில் 2 வது மனைவி கமலா, மகன் குரு ஆகியோர் வெளிப்பக்கமாக பூட்டிய வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தனர்.
கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மோப்ப நாய் பைரவியை வரவழைத்தனர். ஜன்னலில் பெட்ரோல் ஊற்றப்பட்ட இடத்தில் மோப்பம் பிடித்த பைரவி , அதிக ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஒற்றையடி பாதை ஒன்றில் இறங்கி ஓடத்தொடங்கியது.
எதற்காக இந்த பாதையில் செல்கிறது என்ற சந்தேகத்துடன் போலீசாரும் பின் தொடர்ந்து சென்றனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக, காட்டுப்பகுதியில் பூட்டப்பட்ட வீடு ஒன்றின் முன்பு மோப்ப நாய் பைரவி நின்றது.
அந்த வீட்டிற்குள் எரிந்த நிலையில் ஒரு பைக் நிறுத்தப் பட்டிருப்பதையும், அதன் அருகில் பெட்ரோல் கேன் ஒன்று இருப்பதையும் போலீசார் பார்த்தனர். கதவை உடைத்து அந்த கேனை கைப்பற்றிய போலீசார், இதனை தடயமாக கொண்டு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் விசாரித்தனர்.
அப்போது ஒரு பெட்ரோல் பங்கில் அந்த கேனில் ஒரு நபர் 5 லிட்டர் பெட்ரோல் வாங்கிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து பெட்ரோல் வாங்கிச்சென்றது செந்தாமரை கண்ணனின் 3 வது மனைவியுடன் தற்போது 4 வதாக சேர்ந்து வாழும் ராமதாஸ் என்பது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த ராமதாஸ், சத்தியா, தாய் சாலா, தந்தை காவேரி ஆகியோரை பிடித்து விசாரித்த போது இரட்டைக் கொலைக்காண பின்னணி அம்பலமானது.
செந்தாமரைக் கண்ணன் தனது சொத்தில் உரிய பங்கு கொடுக்காததால் 3 வது மனைவி சத்யா, ராமதாஸ் என்பவருடன் ஊரை விட்டு செல்வதாக கூறி அதே ஊரின் ஒதுக்குபுறமாக ஓரு வீட்டில் தங்கி ஆட்டுகிடா வளர்த்து வந்ததாக கூறப்படுகின்றது.
இதனால் ஆத்திரம் அடைந்த செந்தாமரை அண்மையில் ஒரு நாள் சத்யாவின் வீட்டுக்கு சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த ராமதாஸின் பைக்கிற்கு தீவைத்து விட்டு சென்றுள்ளார்.
இதற்கு பழிவாங்கும் வகையில் செந்தாமரையை தீவைத்து எரித்துக் கொல்லும் நோக்குடன் 5 லிட்டர் பெட்ரோலுடன் செந்தாமரை வீட்டிற்கு சென்ற ராமதாஸ்,
வீட்டில் செந்தாமரை இல்லை என்பது தெரியாமல், கதவை வெளிப்பக்கம் கதவைப்பூட்டி விட்டு ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீவைத்ததில் இருவரும் உயிரிழந்திருப்பதாக ராமதாஸ் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கொலையாளி ராமதாஸ், கொலைக்கு தூண்டுகோளாக இருந்த சத்யா, தாய் சாலா, தந்தை காவேரி ஆகிய நான்குபேரை கொலை வழக்கிலும், கொலைக்கு காரணமான முன்விரோதத்தை ஏற்படுத்தியதாக செந்தாமரை கண்ணன் ஆகிய ஜந்து பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த இரட்டை கொலை வழக்கில் விரைவாக துப்பு துலக்க வசதியாக தடயங்களை அலேக்காக அடையாளம் காட்டிய மோப்ப நாய் பைரவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
Comments