வெள்ளக்கோலத்தில் காவிரி... வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை..
கர்நாடகத்தில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில் அணை நிரம்பி, தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் தமிழகத்தில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நடப்பு ஆண்டில் தாமதமாக தொடங்கினாலும் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட மிக அதிகமாவே பெய்து வருகிறது. வழக்கமாக தமிழகத்திற்கு உரிய தண்ணீரையே தர மறுக்கும் கர்நாடக அரசு, இந்த முறை உபரி நீரை நாள் தோறும் அதிக அளவில் திறந்து விட்டு வருகிறது.
மாலை ஆறு மணி நிலவரப்படி கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 18 ஆயிரம் கன அடி வீதத்திற்கும் அதிகமாக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் பாறைகளையும், அருவிகளையும் மூழ்கடித்து, இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு வெள்ளக் கோலத்தை வெளிப்படுத்துகிறது காவிரி.
இதனால் அங்கு குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும், ஆற்றங்கரைக்கு செல்லவும் விதிக்கப்பட்ட தடையை ஆறாவது நாளாக நீடித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி வீதத்திற்கும் அதிகமாக தண்ணீர் வருவதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை சார்பில் விடுத்துள்ள செய்தி குறிப்பில், இரவு 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.67 அடியாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதே ரீதியில் நீர்வரத்து தொடர்ந்தால் ஓரிரு நாட்களில் அணை நிரம்பி, உபரிநீர் மொத்தமும் திறக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால் காவிரி ஆற்றங்கரையின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments