இலங்கையில் மக்கள் வன்முறையைக் கைவிட வேண்டும் என ராணுவம் எச்சரிக்கை.!
இலங்கையில் மக்கள் வன்முறையைக் கைவிட வேண்டும் என ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு நகரின் முக்கிய வீதிகளில் பாதுகாப்புக்காக பீரங்கி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இலங்கை அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்ச மாலத்தீவுக்கும் அங்கிருந்து சிங்கப்பூருக்கும் தப்பிச் சென்றபின், இமெயில் மூலம் தமது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று கோத்தபயவையும் அவர் மனைவி உள்ளிட்டோரையும் பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்ப மாலத்தீவு அரசு ஒத்துழைப்பு அளித்ததாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டுப் பிரச்சினை காரணமாக கோத்தபய சிங்கப்பூர் வந்திருப்பதாகவும், அவர் விரைவில் சவுதி அரேபியாவுக்கு செல்ல இருப்பதாகவும் சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இலங்கை பிரதமரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தேசியக் கொடியை இறக்க முயன்றனர். அப்போது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.
வன்முறை நீடித்து வருவதால், அமைதியை காக்க ஒத்துழைப்பு தரும்படி ராணுவத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாளிகைகளை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இலங்கையில் இதனால் சற்று அமைதி திரும்பியுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை பாதுகாக்க ராணுவ பீரங்கிகள் கொழும்பு நகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜினாமா செய்ததைக் கொண்டாடும் விதமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் பட்டாசுகள் வெடித்து, கோஷங்கள் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
Comments