பாதியில் தவித்த பயணிகள்.. அரசுப் பேருந்து கண்ணாடியை உடைக்கச் சொன்ன ஓட்டுனர்..! போலீஸ் வந்ததால் பயணம் தொடர்ந்தது

0 42060

சிதம்பரத்திலிருந்து ஆண்டிமடம் செல்லும் பேருந்து சேத்தியாத்தோப்போடு நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆண்டிமடம் செல்லும் வழியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பயணிகள், பேருந்தை சிறைப்பிடித்து உரிமைக்குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு வழியாக ஆண்டிமடம் செல்லும் அரசுப் பேருந்து சம்பவத்தன்று இரவு 10.30 மணி அளவில் சேத்தியாதோப்பு வந்தது.

அந்தப் பேருந்து ஆண்டிமடம் செல்லாமல் மீண்டும் சிதம்பரம் செல்ல முயன்றது. இதனால் ஆண்டிமடம் செல்லும் வழியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அரசுப் பேருந்தை சிதம்பரம் திரும்பிச்செல்ல விடாமல் சேத்தியாத்தோப்பில் சிறைப்பிடித்தனர்.

30க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தை ஆண்டிமடம் நோக்கி இயக்க கோரிக்கை வைத்து பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிளை மேலாளரிடம் பேசிவிட்டோம் என்று ஓட்டுனரிடம் தெரிவித்த பயணிகளிடம் உங்களால் என்ன செய்யமுடியும், பேருந்துக் கண்ணாடியை உடைக்க முடியுமா? என்று எகத்தாளமாக கேட்டபடி நின்றார் ஓட்டுனர்.

ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த மகளிருக்கான கட்டணமில்லா 13 நம்பர் பேருந்து நிறுத்தப்பட்டுவிட்டதால் இந்த பேருந்தை மட்டுமே நம்பி இருப்பதாகவும் தனது குழந்தைகள் தனக்காகக் காத்திருப்பதாகவும் கூறி பெண் ஒருவர் ஆவேசமானார்.

நேரம் நீண்டு கொண்டே சென்ற நிலையில் காவல்துறையினர் வந்து பெண் பயணிகளின் நலன் கருதி பேருந்தை ஆண்டிமடத்துக்கு இயக்க அறிவுறுத்தினர். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

சிதம்பரத்திலிருந்து - சேத்தியாத்தோப்பு வழியாக ஸ்ரீமுஷ்ணம், ஆண்டிமடம் பகுதிகளுக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்துகளை இரவு நேரங்களில் மீண்டும் இயக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments