ராணுவ ஒத்துழைப்போடு மாலத்தீவு தப்பிய கோத்தபய

0 1287

இலங்கை ராணுவத்தின் முழு ஒத்துழைப்போடு கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு சென்றதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது. இதனிடையே, கோத்தபய தப்பிச் செல்ல உதவியாக வரும் தகவல்களுக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அதிபர் பதவி விலகக் கோரி அவரது மாளிகையை கைப்பற்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கோத்தபய ராஜபக்சே, அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி தலைமறைவானார்.

இலங்கையில் அமைய உள்ள புதிய அரசின் கைது நடவடிக்கையில் இருந்து தப்ப, மனைவி மற்றும் பாதுகாவலர்களுடன் ஆன்டனவ்-32 ராணுவ விமானம் மூலம் மாலத்தீவுக்கு கோத்தபய ராஜபக்சே தப்பிச் சென்றார்.

இலங்கை ராணுவத்தின் முழு ஒத்துழைப்போடு கோத்தபய மாலத்தீவு சென்றதாக, இலங்கை விமானப்படை விளக்கம் அளித்துள்ளது.

இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி, அதிபருக்குரிய சிறப்பு அதிகாரத்தின்படி, இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்ததால்
கோத்தபய, அவரது மனைவி மற்றும் இரு பாதுகாவலர்கள், இன்று அதிகாலை மாலத்தீவு செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

குடியேற்றத்துறை மற்றும் சுங்கத்துறை சட்டங்களுக்கு உட்பட்டு, காட்டுநாயக்கன் விமான நிலையத்திலிருந்து விமானப்படை விமானம் மூலம் கோத்தபய புறப்பட்டுச் சென்றதாக இலங்கை விமானப்படை கூறியுள்ளது.

இந்த நிலையில் கோத்தபய தப்பிச் செல்ல இந்தியா உதவியதாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை என்றும் ஊகத்துகுரியது எனவும்
கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே கோத்தபயவின் ராஜினாமா கடிதம் இதுவரை கிடைக்கவில்லை என இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments