''மாநிலங்களின் வளர்ச்சியால் தான் நாடும் வளர்ச்சி பெறும்''
உதான் திட்டத்தின் கீழ் கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் சுமார் 70 இடங்களில், புதிய விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் போன்றவை அமைக்கப்பட்டதாகவும், நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 401 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தியோகர் விமானநிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும், அங்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன் பல வளர்ச்சிப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மாநிலங்களின் வளர்ச்சியால் தான் நாடும் வளர்சி அடையும் என்றும் கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசு இந்த கண்ணோட்டத்தில் தான் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், ஜார்காண்ட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள், அம்மாநிலத்தின் சுற்றுலா, பொருளாதாரம், சுகாதாரம் போன்றவற்றிற்கு மட்டுமின்றி கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கும் பெரிதும் பங்காற்றும் என்றார். மேலும், அம்மாநிலங்களில் ரயில், சாலை, விமான போக்குவரத்தின் உட்கட்டமைப்புகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார்.
நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாவட்டங்களிலும் கவனம் செலுத்தி அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதமர் மோடி உரையாற்றினார்.
முன்னதாக பேசிய, முதலமைச்சர் ஹேமந்த் சோரன், சுமார் 12 ஆண்டுகால கனவை பிரதமர் நிறைவேற்றி இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். நிகழ்ச்சி முடிந்து பிரதமர் மோடி செல்லும் வழிநெடுகிலும், பொதுமக்கள் ஏராளமானோர் மலர்கள் தூவி வரவேற்பளித்தனர்.
Comments