சென்னையில் மோதல்,கல்வீச்சு... அ.தி.மு.க. தலைமையகத்துக்கு சீல்.!

0 1992

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுடன் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதால் அப்பகுதி போர்க்களமானது. நிலைமையை கட்டுப்படுத்த கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அலுவலகத்தின் கதவை பூட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது.

கற்கள், கட்டைகள் போன்றவற்றை கொண்டு இருதரப்பும் தாக்கிக் கொண்டதுடன் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டதால் அதிமுக அலுவலகம் அமைந்த பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.

இதனை அடுத்தும், அதிமுக தலைமை அலுவலக கதவினை பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் உடைத்து உள்ளே நுழைந்தனர்.

பின்னர் அங்கிருந்த எடப்பாடி பழனிசாமியின் பேனர்களை கிழித்து பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தீவைத்தனர்.

தனது ஆதரவாளர்கள் புடை சூழ அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற பன்னீர்செல்வம், பால்கனியின் நின்று கையசைத்து, கட்சிக் கொடியை உயர்த்திக்காட்டினார்.

பின்னர் அங்கிருந்த கட்சியின் முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அள்ளிச்சென்றனர்.

அதிமுக அலுவலகத்திற்கு முன் நிகழ்ந்த மோதலில் 20க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் மற்றும் 2 காவலர்கள் காயமடைந்தனர்.

தகவலறிந்து ராயப்பேட்டை அலுவலகம் முன் குவிந்த காவல்துறையினர் அங்கு கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.

பின்னர், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அலுவலகத்தில் ஆய்வு செய்து, அங்கிருந்த பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து அலுவலகத்தில் இருந்து வெளியேறிய பன்னீர்செல்வம், சிறிது நேரம் வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

சட்டவிரோதமாக குவிந்து வருவதை தடுக்கும் வகையில் அதிமுக அலுவலகத்தில் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த அலுவலகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள், நோட்டீஸ் ஒட்டிச்சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY