இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.!
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை பொதுக்குழு முழு மனதாக அங்கீகரித்தது.
முன்னாள் அமைச்சர் நந்தம் விசுவநாதன் பேசிய போது பொதுக்குழு உறுப்பினர்கள் எழுந்து நின்று ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டுமென முழக்கமிட்டனர்.
இதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதே நேரத்தில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற பன்னீர்செல்வம், பால்கனியின் நின்று கையசைத்து, கட்சிக் கொடியை உயர்த்திக்காட்டினார். அங்கிருந்த கட்சியின் முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அள்ளிச்சென்றனர்.
இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகம் அருகே இருதரப்பினரும் மோதிக்கொண்டதில் 2 காவலர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அசம்பாவிதங்களைத் தவிர்க்க அதிமுக அலுவலகத்தில் 145 தடை உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி சீல்வைத்தனர். கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என 25ந் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Comments