ரூ.50 லட்சம் கேட்டு தொழில் அதிபர் கடத்தல்.. 5 பேர் கும்பல் டெல்லியில் கைது..!
டெல்லியில் தமிழக தொழில் அதிபரை துப்பாக்கி முனையில் கடத்தி, 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய, 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த தொழில் அதிபர் கே.எஸ்.வில்வபதி நூற்பாலை நடத்தி வருகிறார்.
இவரை டெல்லியில் இருந்து ஒருவர் செல்போனில் தொடர்புகொண்டு, வங்காளதேசத்துக்கு 50 டன் நூல் தேவை என்றும், ஒன்றே கால் கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும் என்றும் பேசியுள்ளார்.
மேலும் அதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட டெல்லிக்கு வருமாறு அந்த நபர் வில்வபதியை அழைத்துள்ளார்.
இதனை நம்பிய வில்வபதி தன்னுடைய மேலாளர் வினோத்குமாருடன் விமானம் மூலம் கடந்த 7-ந்தேதி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு அவரை மர்ம கும்பல் ஒன்று அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு இடத்துக்கு கடத்திச் சென்றது.
பின்னர் அவரிடம் உங்களை கொலை செய்வதற்கு 40 லட்சம் ரூபாய் ஒருவர் பேரம் பேசி இருப்பதாகவும், நீங்கள் 50 லட்சம் ரூபாய் தந்தால் விட்டுவிடுவதாகவும் கூறியுள்ளது. உடனே பணத்தை தயார் செய்யும்படி துப்பாக்கி முனையில் அந்த கும்பல் மிரட்டியுள்ளது.
இதனை அடுத்து வில்வபதி, ஊரில் உள்ள தன் மகளின் மாமனாருக்கு போன் செய்து 'வியாபார விஷயமாக தமக்கு 50 லட்ச ரூபாயை ரொக்கமாக அனுப்பி வைக்க வேண்டும் என்று ஒருவித பதற்றத்துடன் கூறியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த வில்வபதியின் சம்பந்தி திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த பிரச்னை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும் அவர் உடனே அரியானா போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
அங்குள்ள சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி.யான கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் பாலன் சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டார்.
வில்வபதி குருகிராம் அழைத்துவரப்பட்டதும், பின்னர் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டதும் செல்போன் சிக்னல் மூலம் தெரிய வந்தது.
டெல்லி போலீசாரின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கிய அரியானா போலீசார், வெள்ளிக்கிழமை இரவு டெல்லி ஷியாம் நகர் பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளிகள் 5 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அங்கு கடத்தி வைக்கப்பட்டிருந்த வில்வபதி, வினோத்குமார் ஆகியோரையும் மீட்டனர்.
தமிழக, டெல்லி, அரியானா போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டதுடன், தொழிலதிபரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
Comments