இலங்கையில் பதற்றம் : அடுத்தடுத்து அமைச்சர்கள் விலகல்.. அடுத்த அதிபர் யார்?

0 1523
இலங்கையில் பதற்றம் : அடுத்தடுத்து அமைச்சர்கள் விலகல்.. அடுத்த அதிபர் யார்?

இலங்கையில் நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அதிபர் பதவியில் இருந்து 13ந் தேதி கோத்தபய விலகுகிறார். தற்காலிக அதிபராக நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யப்பா அபேவர்தன செயல்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அதிபர் கோத்தபயா பதவி விலகக் கோரி பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ அமைப்புகள், பொது மக்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் பாதுகாப்பு படையினர் விரட்டினர்.

அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபயா ஆம்புலன்சில் தப்பிச் செல்வதாக தகவல் பரவியதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகை மற்றும் அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

விடிய விடிய அதிபர் மாளிகையிலேயே இருந்து அங்குள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்தும் நீச்சல்குளத்தில் நீச்சலடித்துக் கொண்டும் இருந்தனர்.

அதிபரின் படுக்கையில் படுத்தவாறே கிளர்ச்சியாளர் ஒருவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் வீட்டிற்கு சென்ற போராட்டக்காரர்கள் அங்கும் சூறையாடி தீவைத்தனர்.

இதனிடையே, கோத்தபயா தன் குடும்பத்தினருடன் விமானம் மூலம் தப்பிச் செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.

கொழும்பு துறைமுகத்தில் பயணப் பைகளை கப்பலில் ஏற்றுவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் விமான நிலையம் மற்றும் துறைமுகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.

அதேநேரம் கடந்த வெள்ளிக்கிழமை இரவே அதிபர் மாளிகையை விட்டு கோத்தபயா தன் குடும்பத்தினருடன் வெளியேறியதாகவும், பாதுகாப்பான இடத்தில் ராணுவத்தின் உச்சக்கட்ட பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகருக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அதிபர் பதவியில் இருந்து 13 ஆம் தேதி கோத்தபய ராஜபக்சே பதவி விலக உள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யப்பா அபேவர்தனே தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி அமைய வழிவகுக்கும் வகையில் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரனில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

ரணில் விகரமசிங்கே அமைச்சரவையில் முக்கியத் துறைகளான தொழில் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார, சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரும் பதவி விலகுவதாக அறிவித்தனர்.

அடுத்த அதிபரை தேர்வு செய்யும் வரை சபாநாயகர் மகிந்த யப்பா அபேவர்தனே தற்காலிக அதிபராக செயல்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments