மனைவியை கொன்று பிளாஸ்டிக் பையில் மறைத்து விட்டு கணவர் ஓட்டம்..! ரூ.28 லட்சம் ஆன்லைன் ரம்மியால் விபரீதம்..!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வீட்டை விற்று கிடைத்த 28 லட்சம் ரூபாயை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடியதை கண்டித்த மனைவியை கொலை செய்து பிளாஸ்டிக் பையில் போட்டு மறைத்து விட்டு தலைமறைவான சூதாடி கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த தாளக்குடி சாய் நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ், இவரது மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
கடந்த 5 நாட்களாக தங்கள் மகள் சிவரஞ்சனியின் செல்போனை தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருந்ததால் அவரது பெற்றோர் மகளை பார்க்க வீட்டிற்கு சென்றுள்ளனர்.
வீடு பூட்டப்படிருந்த நிலையில் மாப்பிள்ளை நரசிம்மராஜை தொடர்பு கொண்ட நிலையில் அவரும் செல்போனை எடுக்காததால், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள நரசிம்மராஜூவின் சகோதரியை தொடர்பு கொண்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை நரசிம்மராஜ் இரு குழந்தைகளையும் தனது வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், சிவரஞ்சனிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக கூறிய நரசிம்மராஜ் தாயுடன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக கூறி உள்ளார்.
மாப்பிள்ளை நரசிம்மராஜுக்கும் , சிவரஞ்சனிக்கும் வீடு விற்ற 28 லட்சம் பணத்தை எதில் முதலீடு செய்வது என்று பிரச்சனை ஏற்பட்டு அடிதடி தகராறு உண்டான நிலையில் தங்கள் மகள் மாயமாகி இருப்பதால் சந்தேகம் எழுவதாக போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் பூட்டப்பட்டுக் கிடந்த நரசிம்மராஜின் வாடகை வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
உள்ளே வாஷிங் மெஷின் அருகில் மறைத்து வைக்கப்படிருந்த பிளாஸ்டிக் பையில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் அதனை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பிளாஸ்டிக் பையில் கொடூரமாக கொல்லப்பட்ட சிவரஞ்சனியின் சடலம் அழுகிய நிலையில் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்தது.
சடலத்தை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் ரம்மியின் கோரமுகத்தால் நிகழ்ந்த விபரீதம் அம்பலமானது.
கடந்த 20 வருடங்களாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதை முழு நேர தொழிலாக செய்துவந்த நரசிம்மராஜ். புதிய வீடு கட்டி குடியேறி உள்ளார். அதன் பின்னர் சம்பாதிக்கும் பணத்தை ஆன் லைன் ரம்மி விளையாடி இழந்த நரசிம்மராஜ் புதிய வீட்டை 28 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.
அந்த பணத்தை லாட்டரியில் முதலீடு செய்ய போவதாக கூறியதால் மனைவி சிவரஞ்சனி, தடுத்து நிலம் வாங்கி போடும் படி கூறி உள்ளார். இதில் தகராறு ஏற்பட்டு மனைவியை அடித்து உதைத்துள்ளார்.
சிவரஞ்சனியின் பெற்றோர் வந்து சமரசம் செய்து வைத்த நிலையில் வீடு விற்ற பணத்தை ஆன் லைன் ரம்மி விளையாடி கொஞ்சம் கொஞ்சமாக இழந்துள்ளார்.
கணவன் நள்ளிரவில் அமர்ந்து ரம்மி விளையாடுவதை பார்த்து கண்டித்துள்ளார் சிவரஞ்சனி, இதில் ஆத்திரம் அடைந்த நரசிம்மராஜ் மனைவியை அடித்து உதைத்து கத்தியை எடுத்து குத்தி கொலை செய்துள்ளார்.
சடலத்தை பிளாஸ்டிக் பையில் மூட்டையாக கட்டி மறைத்து வைத்த நரசிம்மராஜ், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தனது தாய் மற்றும் இரு பெண் குழந்தைகளிடமும் சிவரஞ்சனிக்கு கொரோனா வந்துவிட்டது ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளேன் என்று ஏமாற்றி ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். நரசிம்மராஜை பிடிக்க தனிப்படை ஆந்திரா விரைந்துள்ளது.
ஆன் லைன் ரம்மி இன்னும் எத்தனை குடும்பங்களை அழிக்க போகின்றதோ..? அதற்குள்ளாக அதற்கு மத்திய மாநில அரசுகள் ஒரு இறுதியான முடிவு கட்ட வேண்டும் என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது.
Comments