வருமானத்துக்கு அதிகமாக 500 சதவிகிதம் சொத்துக்குவிப்பு.? முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு.!
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக வழக்குப் பதிந்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினர், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் அவருக்குத் தொடர்புடைய 52 இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 963 சவரன் நகைகளும், 41 இலட்ச ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் மீதும், அவர் மகன்கள் இனியன், இன்பன், நண்பர்கள் சந்திரசேகரன், உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீதும் திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். முறைகேடாகச் சம்பாதித்த பணத்தில் சொத்துக்களை வாங்கிக் குவித்ததும், கட்டுமானத் தொழில் செய்த வருமானத்தை மறைத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக 58 கோடியே 84 இலட்ச ரூபாய் சொத்துக்கள் குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் அடையாறு, மயிலாப்பூர், போயஸ் தோட்டம் உட்பட காமராஜுக்குத் தொடர்புடைய 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
திருச்சி கே.கே.நகர் ஐயர் தோட்டத்தில் காமராஜின் நண்பர் பாண்டியன் வீட்டிலும், தில்லை நகரில் உள்ள நண்பர் இளமுருகு வீட்டிலும், ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
கோவை ராமநாதபுரத்தில் காமராஜின் மகன் இன்பனுக்குச் சொந்தமான ஸ்கைலைன் அப்பார்ட்மெண்ட் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைத் துறைக் கூடுதல் கண்காணிபாளர் திவ்யா தலைமையிலான 8 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை மயிலாப்பூரில் காமராஜுக்குச் சொந்தமான ஜி.பி.ஏ கன்சல்டன்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில், அதே இடத்தில் வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தினர்.
காமராஜுக்குச் சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் 963 சவரன் நகைகளும், 41 இலட்ச ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். 24 கிலோ வெள்ளி, ஐபோன், கணினி, பென்டிரைவ், ஹார்ட் டிஸ்க் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
Comments