ஜப்பான் முன்னாள் பிரதமர் சுட்டுக் கொலை.. பிரச்சாரத்தின்போது பயங்கரம்!

0 1559

தேர்தல் பரப்புரையின் போது ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜப்பான் மேலவைக்கு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஆளும் Liberal Democratic கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் பிரதமருமான ஷின்சோ அபே மத்திய ஜப்பானில் உள்ள நாரா என்ற இடத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வெகுசிலரே கூடியிருந்த நிலையில், திடீரென பின்னால் இருந்து வந்த ஒருவர், மிக அருகில் இருந்து ஷின்சோ அபேவை நோக்கி இரு முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் சுய நினைவை இழந்த ஷின்சோ அபே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். ஜப்பான் நேரப்படி காலை 11.30 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றது.

உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் நாரா மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அபே. 67 வயதான ஷின்சோ அபே உடலிலிருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறிய நிலையில் ஜப்பான் நேரப்படி மாலை 5.03 மணிக்கு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மிகவும் இக்கட்டான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட ஷின்சோ அபேவுக்கு 100 யூனிட் வரை ரத்தம் செலுத்தப்பட்டதாகவும், துப்பாக்கி குண்டு இதயத்தின் ஆழம் வரை பாய்ந்ததால் அவர் இறந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே ஷின்சோ அபேவை சுட்ட யமாகாமி டெட்சூயா ((Yamagami Tetsuya)) என்பவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். அவர் பயன்படுத்திய துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் கடற் பாதுகாப்பு படையில் பணியாற்றிய அவர் 2005 ஆம் ஆண்டு ராஜினாமா செய்துள்ளார். ஷின்சோ அபேயின் நடவடிக்கைகள் பிடிக்காததால், அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு சுட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இருமுறை பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே, ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமை பெற்றவர்.
முதலில் 2006 முதல் 2007ஆம் ஆண்டு வரையிலும் பின்னர் 2012 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலும் பிரதமராக இருந்த அபே, உடல் நலக்குறைவினால் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

ஷின்சோ அபேயின் சோகமான மறைவு குறித்து வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் சனிக்கிழமை ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments