விட்டா பாம்பை கடிச்சி திண்ணுருவாரு போல..! டான்ஸ்ன்னாலும் நியாயம் வேணாமா ? ஸ்னேக் பாபுவை வனத்துறை தேடுகின்றது
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே கோவில் விழாவில் நாகப்பாம்புகளை வைத்தும், சாரை பாம்புகளை கடித்தும் நடன நிகழ்ச்சி நடத்தியவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர், பாம்புகளை பாடாய்ப்படுத்திய ஸ்னேக் பாபுவின் சேட்டை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
பாம்பு கடித்து பார்த்திருப்போம் பாம்பை வாயால் கடித்தவரை பார்த்திருக்கிறோமோ ? அப்படிப்பட்ட வினோத வில்லங்க சேட்டைகளை மேடையில் செய்த ஸ்னேக் பாபு இவர் தான்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள எஸ்.குமாரபுரத்தில் ஸ்ரீகாளியம்மன் கோவில் கொடை விழாவினை முன்னிட்டு ஆடல்,பாடல் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பாம்பாட்ட கலைஞர் ஒருவர் முதலில் வாய் தைக்கப்பட்ட இரு சாரை பாம்புகளை வைத்து நடனமாடினார்.
அந்த பாம்புகளை புடலங்காய் போல கையால் பிடித்து இழுத்து அவர் செய்த சேட்டைகளின் உச்சமாக இரண்டு பாம்பையும் ஒன்றாக இணைத்து அதன் தலைகளை வாயால் கடித்து வில்லங்க சாகசம் செய்தார்.
அதுவரை அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஊர் மக்கள், அந்த நடனகலைஞர் 3 நாகப்பாம்புகளை எடுத்து வித்தைக்காட்ட ஆரம்பித்ததும், எங்கே கூட்டத்துக்குள் பாம்பு பாய்ந்து வந்துவிடபோகிறதோ என்ற பதற்றத்தில் எழுந்து நின்றனர்.
அதுவரை எழுந்து நின்று நடனமாடியபடியே பாம்புகளை கையாண்ட அந்த ஸ்னேக் பாபு படம் எடுத்து ஆடிய அந்த நாகப்பாம்புகளுடன் மேடையில் படுத்துக் கொண்டு அவற்றை பாடாய் படுத்த தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் படம் எடுத்தாடிய பாம்பு ஒன்றை கையில் எடுத்து அதற்கு சவால் விடும் வகையில் அதன் நாக்கை தனது நாக்கால் தொட்டு பார்ப்போரை பதற வைத்தார்.
ஒருவழியாக அந்த ஸ்னேக் பாபு நிக்ழ்ச்சியை முடித்து விட்டு தனது குழுவினருடன் ஊருக்கு புறப்பட்டு சென்று விட்ட நிலையில் கோவில் விழாவில் அவர் செய்த பாம்பு சேட்டைகள் ஒவ்வொன்றும் வீடியோவாக வாட்ஸ் அப்பில் சுற்ற, ஆப்பசைத்த குரங்காக சினேக் பாபுவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த வீடியோக்களை பார்த்த காவல்துறையினர் தங்கள் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சி குறித்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
பாம்பு உள்ளிட்ட எந்த ஒரு வன விலங்குகளையும் காட்சிப்படுத்தக்கூடாது , துன்புறுத்தக்கூடாது ஏனேனில் அப்படி செய்வது சட்டப்படி தண்டனைக்குறிய குற்றம் என்பதால் வனத்துறையினர் பாம்பை வைத்து ஆட்டம் காண்பித்த அந்த வில்லங்க வித்தக்காரரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஊர் பிரமுகர்களிடமும், அவரை அழைத்து வந்த நடனக்குழுவினரிடமும் விசாரணை நடத்தி, பாம்புகளுடன் அந்த நடன கலைஞரை கைது செய்ய வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Comments