புல்லட்டு ரூ 22 ஆயிரம் ஆக்டிவா ரூ 6 ஆயிரம்... திருடுறத விட விக்கிறதுல பாஸ்ட்..!
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை பகுதியில், இரு சக்கர வாகனங்களைத் திருடி குறைந்த விலைக்கு விற்று, கூகுள்பே மூலம் காதலிக்கு அள்ளிக் கொடுத்த பைக் களவாணியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு இருந்த தந்தையை பார்க்கச்சென்ற வெங்கடேஷ் என்பவரின் பைக் கடந்த 1ந்தேதி திருடு போனது. மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்த வாகன திருட்டை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை முன்னெடுத்தனர்.
மருத்துவமனை வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, சந்தேகத்திற்கு இடமாக அங்கு சுற்றித் திரிந்த இரு நபர்களின் புகைப்படத்தை, மற்ற குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களோடு ஒப்பிட்டு பார்த்து, சோழவரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை, தனிப்படை போலீசார் ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் சென்னை முழுக்க பல்வேறு பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடி விற்று வந்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ராயபுரம், திருவொற்றியூர் போன்ற பகுதிகளில் திருடிய இருசக்கர வாகனங்களை, மலிவான விலைக்கு ஸ்ரீதர் விற்றது தெரியவந்தது. குறிப்பாக ஹோண்டா ஆக்டிவா 4 G மற்றும் 5 G வாகனத்தை வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கும் , புல்லட் இருசக்கர வாகனத்தை 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றதாக தெரிவித்துள்ளார்.
விற்று வந்த பணத்தை, கூகுள்பே மூலம் பெற்று, தகாத உறவுக்கும், காதலிக்கும் அள்ளிக் கொடுத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளார். இருசக்கர வாகனத்தை விற்று கையில் அதிக பணம் வைத்திருந்தால் போலீசார் சோதனையில் சிக்கி சந்தேகம் ஏற்படும் என்பதால், வங்கியில் செலுத்தி கூகுள்பே பரிவர்த்தனை மூலம் பணத்தை செலவு செய்து வந்தது தெரியவந்துள்ளது.
பைக் களவாணி ஸ்ரீதர் அளித்த தகவலின் பேரில், அவனது கூட்டாளிகளான அசாருதீன், ராஜசேகர், பயாஸ் ஆகிய நான்கு பேரை கைது செய்த போலீசார் மொத்தம் 22 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதில் பிடிபட்ட அசாருதீன் டன்சோ டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
பாதுகாப்பில்லாமல் பொது இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களையும், அரசு மருத்துவமனைகளின் பைக் பார்க்கிங்கில் உள்ள வாகனங்களையும் நோட்டமிட்டு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அசாருதீன் இருசக்கர வாகனத்தில் tow செய்து திருடிச் செல்வது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
திருடப்படும் இருசக்கர வாகனங்களை விரைவாக விற்பதில் இவர்கள் எக்ஸ்பர்ட்டாக செயல்பட்டுள்ளனர். திருட்டு பைக் வாங்குபவர்களிடம், பைனான்ஸில் முறையாக மாத தவணை கட்டாத கடனாளியின் வாகனம் எனக் கூறியும், இதற்கு உண்டான வாகனப்பதிவு புத்தகம், இன்ஸ்சூரன்ஸ் ஆகியவை ஒருசில நாட்களில் கொடுக்கப்படும் என்று ஏமாற்றியும் குறைந்த விலைக்கு விரைவாக விற்றது தெரிய வந்துள்ளது.
தாங்கள் வாங்கிய பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதால், இவர்களிடம் குறைந்த விலைக்கு பைக் வாங்கியவர்கள் கொடுத்த மொத்த பணமும் கடலில் கரைத்த பெருங்காயமாகி விட்டது.
Comments