தார் ஜீப்பின் டாப்பில் கறி வெட்டும் கத்தியுடன் உலா வந்த நகை கடை அதிபர்.. பாய்ந்தது போலீஸ் வழக்கு!
இறைச்சிக் கடை திறப்பு விழாவிற்காக, கையில் வெட்டுக்கத்தியுடன் தார் ஜீப்பின் கூரையில் அமர்ந்து ஊர்வலமாக வந்த பிரபல நகைக்கடை அதிபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் செம்மனூர் பேஷன் ஜுவல்லரியின் உரிமையாளர் போபி செம்மனூர் என்பவர் தான் கெத்து காட்டுவதற்காக, தார் ஜீப்பின் மீது ஏறி கத்தியுடன் அமர்ந்து உலா வந்து வாண்டடாக வழக்கு வாங்கிய வள்ளல்.
கேரளா மற்றும் தமிழகத்தில் நகைக்கடைகளை நடத்தி வரும் இவர், தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக சாலையில் ஓட்டம், கூட்டத்தில் ஆட்டம் என்று அவ்வப்போது ஏதாவது ஒரு வேடிக்கை வினோத செயல்களில் ஈடுபடுவது வழக்கம்.
எப்போதும் வெள்ளை அரைக்கை சட்டை- வேட்டியுடன் காணப்படும் இவர், திருச்சூரில் தான் தொடங்க இருக்கும் இறைச்சிக் கடையின் முதல் கிளையை திறந்து வைப்பதற்காக வாகனங்கள் அணிவகுக்க, தார் ஜீப் ஒன்றின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு கையில் கத்தியுடன் வருகை தந்தார்.
அந்த வாகனத்தில் இருந்து குதித்து இறங்கி, கையில் இருந்த வெட்டுக் கத்தியால் கடையின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததோடு, அங்கிருந்த மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி உள்ளிட்ட பல்வேறு வகையான இறைச்சிகளை வெட்டி அவற்றை பாக்கெட்டில் போட்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்த வீடியோ காட்சிகள் வைரலான நிலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகன பேரணி நடத்தியதோடு, போக்குவரத்து விதியை மதிக்காமல் வாகனத்தின் கூரை மீது ஏறி அமர்ந்து பயணித்தது குற்றம் என்பதால் அந்த வாகனத்தில் ஓட்டுனர் மற்றும் போபி செம்மனூர் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, பொதுவெளியில் கையில் கத்தியுடன் பார்ப்போரை அச்சுறுத்தும் வகையில் வலம் வந்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்வது குறித்து உள்ளூர் போலீசார் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
பிரபலமாக நினைத்து கத்தியுடன் சீன் போட்ட நகைக்கடை அதிபர், போலீஸ் வழக்கில் சிக்கி விசாரணைக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments