வேளாங்கண்ணியில் பாவம்... மனைவியின் 96 காதலனை கார் ஏற்றிக் கொன்ற கணவன்..! சினிமா பாணியில் சேசிங் மர்டர்

0 4418

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில், '96' பட பாணியிலான மனைவியின் பள்ளிப்பருவ காதலனை கார் ஏற்றிக் கொலை செய்ததாக கணவனையும், கணவனை கூலிப்படை ஏவிக் கொல்ல முயன்றதாக மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே உள்ள ஏஞ்சல் ரெசிடன்ஸி தங்கும் விடுதியின் உரிமையாளர் வினோத் விக்டர். இவரது மனைவி மரிய ரூபினா மார்ட்டினா. கடந்த வருடம் வினோத் விக்டர் வெளி நாட்டிற்கு மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சென்றதால், தங்கும் விடுதியை தனது மனைவியின் மூலம் அறிமுகமான திமுக பிரமுகர் மதன் கார்த்தி என்பவருக்கு விக்டர் லீசுக்கு கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் மதன் கார்த்தி, மார்ட்டினாவைத் தேடி வீட்டிற்கு போக்கும் வரத்துமாக இருப்பதாக விக்டருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டில் மனைவிக்கு தெரியாமல் வைத்துச்சென்ற கேமரா காட்சிகள் மூலம் மதன் கார்த்தி வீட்டு வந்து சென்றதை உறுதிப்படுத்திய விக்டர் இது குறித்து கேட்டு தனது மனைவி மார்ட்டினாவிடம் சண்டையிட்டுள்ளார். விடுதி விவகாரம் தொடர்பாக வந்து சென்றதாக கூறி மனைவி மார்ட்டினா சமாளித்துள்ளார்.

இதையடுத்து விடுதியை திரும்பப் பெறும் திட்டத்துடன் விக்டர் ஊருக்கு திரும்பிய நிலையில், கடந்த வாரம் மதன் கார்த்தி விடுதியை காலி செய்ய மறுத்து தகராறு செய்ததோடு விக்டரையும் தாக்கி உள்ளார். இதில் விக்டர் காயங்களுடன் உயிர் தப்பி உள்ளார். சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய அவர், சம்பவத்தன்று விக்டர் தனது காரில் மனைவி மார்ட்டினாவுடன் விடுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது வேளாங்கண்ணி சுனாமி ஸ்தூபி அருகே காரை மறித்த மதன் கார்த்தி தலைமையிலான 15 பேர் கொண்ட மர்ம கும்பல் கார் மீது பயங்கரமாக தாக்கி உள்ளது. ஓட்டுனர் இறங்கி ஓடிவிட்ட நிலையில் , ஓட்டுனர் இருக்கைக்கு மாறிய விக்டர் காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.

இருந்தாலும் அவர்களை விடாத மதன் கார்த்தி கூட்டாளியுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் விக்டரின் காரை 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று காரை மறித்துள்ளார். அதிவேகத்தில் வந்த விக்டர், தனது உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக மதன் கார்த்தியையும் கூட்டாளியையும் காரால் அடித்து தூக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த மதன் கார்த்தி உயிரிழந்த நிலையில், கூட்டாளி அமுதன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் நடத்திய விசாரணையில் விக்டரை காரில் அழைத்து வருவதாக கூறி, கொலைக்கு திட்டம் வகுத்து கொடுத்ததே அவரது மனைவி மார்ட்டினா என்பது அம்பலமானது.

மதன் கார்த்தியும், மார்ட்டினாவும் 96 சினிமா பாணியிலான காதலர்கள் என்று கூறப்படுகிறது. பள்ளிப் பருவ காதலனுடன் சேர்ந்து வாழும் திட்டத்தில் தனது விடுதியை அவருக்கு லீசுக்கு கொடுக்கவைத்த மார்ட்டினா, தனது கணவர் வைத்த காமிராவில் கையும் களவுமாக சிக்கியதால் , கணவனை தீர்த்துக் கட்ட காதலன் மதன் கார்த்தியை ஏவி உள்ளார்.

முதல் தாக்குதலில் கணவர் தப்பிய நிலையில், 2 வதாக இவர்கள் திட்டப்படி கூலிப்படையினர் காரை மறித்தபோது ஓட்டுனர் ஓடிவிட, எதிர்பாராத திருப்பமாக, கணவர் விக்டரே காரை ஓட்டிச்சென்று மனைவியின் காதலன் மதன் கார்த்தியை தீர்த்துக் கட்டிய சம்பவம் அரங்கேறி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கொலை வழக்கில் கணவன் விக்டரையும் , கணவனை கொலை செய்ய கூலிப்படை ஏவிய வழக்கில் மனைவி மார்ட்டினாவையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments