மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த விவகாரம்-தேடப்பட்டு வந்த மருந்தக உரிமையாளர் கைது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சட்டவிரோதமாக மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த வழக்கில், தேடப்பட்டு வந்த மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வேல்முருகன் - அனிதா தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக அனிதா கருவுற்றார்.
கடந்த மே மாதம் இராமநத்தம் பகுதியில் முருகன் என்பவரது மருந்தகத்திற்கு சென்று, அங்கு மறைமுகமாக வைக்கப்பட்டிருந்த ஸ்கேன் மையத்தில் சட்டவிரோதமாக ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அதில் பெண் குழந்தை என்பது தெரியவந்ததை அடுத்து, அனிதாவுக்கு முருகன் கருக்கலைப்பு மாத்திரை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனை உண்ட அனிதா அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், வேப்பூர் அருகே காட்டில் பதுங்கி இருந்த முருகனை போலீசார் கைது செய்தனர்.
Comments