டிஜிட்டல் மையத்தில் உலகை வழிநடத்துகிறது இந்தியா - பிரதமர் மோடி
ரேஷன் கார்டுக்கும், பிறப்புச் சான்றிதழுக்கும் வரிசையில் நின்ற காலம் மலையேறி விட்டதாகவும், டிஜிட்டல் மயமாக்கத்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு சேவைகளுக்கான டிஜிட்டல் போர்ட்டல்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய மோடி, காந்தி நகரில் துவக்கி வைக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தொழில் தொடங்குவதை எளிதாக்கி, தொடக்க நிலை நிறுவனங்களுக்கு சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் என்றார். நான்காம் தொழிற்துறை புரட்சியில் இந்தியா அங்கம் வகிப்பது மட்டுமல்லாமல் உலகையே வழிநடத்திச் செல்வதாக பெருமையுடன் கூறலாம் என்றார்.
பத்தாண்டுகளுக்கு முன், பிறப்பு சான்றிதழ் முதல் பள்ளிக் கல்லூரிகளில் இடம் பெறுவது, ரேசன் வாங்குவது, பில் செலுத்துவது, வங்கிகளில் சேவை பெறுவது என மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த காலம் போய்விட்டதாகக் குறிப்பிட்ட மோடி,அனைத்தும் ஆன்லைன் மயமாகப்பட்டதால் மக்களின் வாழ்க்கைமுறை மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் ஊழலில் இருந்து ஏழை மக்களைக் காத்து நிவாரணம் அளிப்பதாகவும், இடைத்தரகர்களை முற்றிலும் ஒழிக்க தமது அரசு பாடுபட்டு வருவதாகவும் மோடி தெரிவித்தார்.
அரசு அலுவலகங்களுக்கு செல்லாமலேயே, சேவைகளை மக்கள் பெறும் வகையில் ஆதார், யுபிஐ, கோவின், டிஜி லாக்கர் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள் இயங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
பல்வேறு அரசு நலத் திட்டங்கள் மற்றும் சேவைகள் வெளிப்படைத் தன்மையுடன் இயங்குவதாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டு முதல் 23 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் நேரடி பணப்பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
Comments