ஐ.டி.ஊழியரை அடித்தே கொன்ற ஓலா கார் ஓட்டுனர்..! குடும்பத்தினர் முன் வெறிச்செயல்..!

0 6315
ஐ.டி.ஊழியரை அடித்தே கொன்ற ஓலா கார் ஓட்டுனர்..! குடும்பத்தினர் முன் வெறிச்செயல்..!

ஓலா கால்டாக்ஸியை புக் செய்தவர் ஓடிபியை சொல்லாததால் ஏற்பட்ட தகராறில் ஐடி ஊழியரை கார் ஓட்டுனர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் கிராமம், குந்தன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 33-வயதான உமேந்தர்.

கோயம்புத்தூரில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்த உமேந்தர், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு சனிக்கிழமை காலை கன்னிவாக்கத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார்.

சம்பவத்தன்று ஞாயிற்றுகிழமை குடும்பத்துடன் சினிமா பார்ப்பதற்காக கன்னிவாக்கம் வீட்டிலிருந்து மனைவி பவ்யா, குழந்தைகள் அக்ரேஷ், கருண், பவ்யாவின் சகோதரி தேவிப்பிரியா மற்றும் அவரது இரு குழந்தைகள் உள்பட 7 பேர் ஓலா கார் மூலம் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு மாலை சென்றுள்ளனர்.

படம் பார்த்து விட்டு வீடு திரும்புவதற்காக பாவ்யா சகோதரி தேவிப் பிரியாவின் செல்போனில் இருந்து ஓலா கார் புக்கிங் செய்துள்ளனர்.

சிறிது நேரத்தில் இன்னோவா கார் வந்ததும் அனைவரும் காரில் ஏறியுள்ளனர். கார் ஓட்டுநர் ரவி என்பவர் ஓ.டி.பி எண்ணை சொல்லுமாறு கேட்டுள்ளார் அப்போது ஓலா ஆப்பில் பார்க்காமல் தனது செல்போனில் உள்ள குருஞ்செய்தி இன்பாக்சில் ஓ.டி.பி.யை தேடியுள்ளார்.

இதனால் கோபமடைந்த கார் ஓட்டுநர் ஓ.டி.பி. வரவில்லை என்றால் காரை விட்டு இறங்குமாறு கூறியுள்ளார். அதற்கு இறங்க முடியாது என்று உமேந்தரும் உடன் வந்தவர்களும் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகளுக்கும் ஓட்டுநர்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் காரை விட்டு இறங்கிய உமேந்தர் காரின் கதவை வேகமாக சாத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் ரவி ஏன் என்னுடைய கார் கதவை வேகமாக சாத்தினாய் என்று கேட்டு உமேந்தரை அடித்துள்ளார்.

அதேபோல் ஓட்டுநர் ரவியை உமேந்தர் கூல்ட்ரிங்ஸ் பாட்டிலால் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் ரவி உமேந்தரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த உமேந்தர் மீது ஏறி மீண்டும் கையால் குத்தியுள்ளார். ஓட்டுநரை உமேந்தர் குடும்பத்தினரும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

கீழே விழுந்த உமேந்தர் மயக்கமடைந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் உமேந்தரை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு உமேந்தரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் தப்பி ஓட முயன்ற ஓலா கார் ஓட்டுநர் ரவியை பிடித்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அடிப்படையில் கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ், உதவி ஆய்வாளர் தமிழன்பன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஓலா கார் ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

சேலம் அடுத்த ஆத்தூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்த ஓலா ஓட்டுநர் ரவி மீது வழக்கு பதிவு செய்த கேளம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி, குழந்தைகள், உறவினர்கள் கண் முன்னே ஐடி ஊழியர் ஓலா ஓட்டுநரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மீளா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓலா நிறுவனம் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களை ஓட்டுனராக நியமித்ததால் இந்த விபரீத கொலை சம்பவம் அரங்கேறி உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments