தேசிய செயற்குழு கூட்டம் : ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சியமைக்க பாஜக தீர்மானம்..!

0 1451
தேசிய செயற்குழு கூட்டம் : ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சியமைக்க பாஜக தீர்மானம்..!

தாங்கள் ஆட்சியில் இல்லாத தெலங்கானா, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆட்சியமைக்க பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பன்னாட்டுக் கூட்ட அரங்கில் 2ஆம் நாளாக இன்று பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், மாநிலத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கட்சியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது, உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்து பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

அதில், இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சிகள் தற்போது வீழ்ச்சியில் உள்ளதாகவும், அவர்களை கேலி செய்யாமல் அவர்களின் தவறுகளில் இருந்து பாஜக பாடம் கற்க வேண்டும் என்றும் பிரதமர் பேசியதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், சமீப ஆண்டுகளாக பாஜக விரைவான வளர்ச்சியை பெற்று வருவதாகவும், தெலங்கானா, மேற்குவங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் தொண்டர்கள் கடுமையாக போராடுவதாகவும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக கூட்டத்தில் பேசிய அமித்ஷா, அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலம் தான் என்றும் இந்தியா உலகிற்கே தலைமை தாங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் போது எதிர்க்கட்சிகள் அராஜகத்தை பரப்புவதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, தாங்கள் ஆட்சியில் இல்லாத தெலங்கானா, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆட்சியமைக்க பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளில் ஏழை, எளிய, பழங்குடியினர் போன்றவர்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதால், அனைத்து பிரிவினருக்கும் மத்திய அரசின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், நாடு முழுவதும் வங்கிக் கணக்குகள் வைத்திருப்பதிலும், சொத்துக்களை தங்கள் பெயரில் வைத்திருப்பதிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாக அண்மையில் ஒரு அறிக்கை வெளியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments