ஏன்டா காசு காசுன்னு பிச்சி பிடுங்கறீங்க.. ? லஞ்சத்தில் அரசு ஆஸ்பத்திரி..! நிஜத்தில் இந்தியன் தாத்தா வரனும்.!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனையில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளியின் உறவினர்களிடம் இருந்து லஞ்சம் பெறப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. தொட்டதற்கெல்லாம் பணத்தை லஞ்சமாக பெறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏழை எளியோரும், வறுமையால் வாடுவோரும் உயிர் காக்கும் உயர் சிகிச்சையை கட்டணமில்லாமல் பெற வேண்டும் என்பதற்காக அரசு மருத்துவமனைகளில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகின்றது.
ஆனால் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர் தொடங்கி வார்டு பாய், செவிலியர்கள் என ஒவ்வொருவரும் அவர்களின் தகுதிக்கு ஏற்ப நோயாளிகளின் உறவினர்களிடம் தயக்கமில்லாமல் லஞ்சப்பணத்தை கேட்டுப்பெறுவது வாடிக்கையாக மாறி உள்ளது.
அந்தவகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனையில் விரை வீக்கம் நோயால் பாதிக்கப்பட்டவரை அவரது மனைவி கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ மனையில் சேர்த்துள்ளார்.
அவருக்கு அறுவை ச்கிச்சை மேற்கொண்ட மருத்துவருக்கு 1500 ரூபாய், அறுவை சிகிச்சை முடிந்ததும் இருந்து நோயாளியை வார்டுக்கு கொண்டு செல்ல 200 ரூபாய், நோயாளிக்கு முடியை மலிக்க என்று 100 ரூபாய் என கிட்டதட்ட 2500 ரூபாய் வரை தொட்டதெற்கெல்லாம் கட்டாயமாக லஞ்சப்பணத்தை கேட்டுப்பெற்றுக் கொண்டதாக நோயாளியின் மனைவி வேதனை தெரிவித்தார்.
அங்கு பணியிலிக்கும் ஊழியர் பகிரங்கமாக லஞ்சப்பணாம் பெறும் வீடியோ ஆதாரத்தையும் அந்தப்பெண் வெளியிட்டார். மாதந்தோறும் கை நிறைய அரசு ஊதியமும்பெற்றும் கொண்டு , கட்டாயப்படுத்தி லஞ்சப்பணமும் பெறும் ஊழியர்களால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஏழை எளிய மக்கள் அலைகழிக்கப்பட்டு சொல்லொன்னா துயரத்துக்கு ஆளாவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த சிறிய அளவு பணம் கூட இல்லாதவர்களுக்கு அரசு மருத்துவ மனைகளில் முறையான சிகிச்சையே கிடைக்காதா ? என்பதே சாமானியர்களின் ஆதங்கமாக உள்ளது.
Comments