மகாராஷ்டிரத்தில் ஜூலை 4ஆம் நாள் நம்பிக்கை வாக்கெடுப்பு..!
மகாராஷ்டிரத்தில் ஏக்நாத் சிண்டே தலைமையிலான பாஜக - சிவசேனா கூட்டணி அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையைக் காட்டும் வகையில் ஜூலை நான்காம் நாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளது.
மகாராஷ்டிரத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி அரசின் முதலமைச்சராக ஏக்நாத் சிண்டேயும், துணை முதலமைச்சராகத் தேவேந்திர பட்னாவிசும் பதவியேற்றுள்ளனர். நானா பாதோல் பதவி விலகியதில் இருந்தே சட்டப்பேரவைத் தலைவர் பதவி காலியாக உள்ளது.
இந்நிலையில் பேரவைத் தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நாளை நடைபெற உள்ளது. ஜூலை 3, 4 ஆகிய நாட்களில் மகாராஷ்டிரச் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 3 அன்று பேரவைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும். ஜூலை 4 அன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திப் பெரும்பான்மையை மெய்ப்பிக்க ஏக்நாத் சிண்டே தலைமையிலான அரசு தீர்மானித்துள்ளது.
இதனிடையே சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Comments